Show all

ஆண்டிப்பட்டியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை! இயங்கலை வகுப்பு புரியவில்லை என்பதான காரணம் பற்றி

இயங்கலை வகுப்பு புரியவில்லை என்பதாக முன்பே ஒரு மாணவன் பலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் பள்ளியொன்றில் 11ஆம் வகுப்பு பயின்று வந்திருந்த மாணவன் இயங்கலை வகுப்பு புரியவில்லை என்கிற காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டியில் கரட்டிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் விக்கிரபாண்டி அகவை 16. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் விக்கிரபாண்டி தங்கி இயங்கலை மூலம் கல்வி பயின்று வந்தார். இயங்கலையில் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை என தந்தையிடம் விக்கிரபாண்டி கூறி வந்துள்ளார்.

ஆனால் இளங்கோவோ, நீ படித்துத்தான் ஆக வேண்டும் என மகனிடம் கண்டிப்புடன் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்கிரபாண்டி, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்ட உறவினர்கள், மாணவனை மீட்டு தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.