தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததுள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் புதிய தகவலை தமிழக நலங்குத் துறை தெரிவித்துள்ளது. 18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது என்றும் நேற்று புதிதாக 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழக நலங்குத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து நலங்குத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,465 ஆண்கள், 2,525 பெண்கள் என மொத்தம் 5,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேரும், 12 அகவைக்கு உட்பட்ட 182 குழந்தைகளும், 60 அகவைக்கு மேற்பட்ட 852 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,025 பேரும், கோவையில் 579 பேரும், கடலூரில் 405 பேரும், சேலத்தில் 403 பேரும், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 47 லட்சத்து 99 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 688 ஆண்களும், 1 லட்சத்து 74 ஆயிரத்து 242 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் பள்ளித் திறப்பு என்கிற சிந்தனையை முன்னெடுப்பது கடும் விளைவுகளைத் தரும் என்பதாகவும், பள்ளி திறக்காத தற்போதைய நிலையிலேயே, 12 அகவைக்கு உட்பட்ட 20 ஆயிரத்து 131 குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ள அதிர்ச்சித் தகவலைத் தெரிவிப்பதாகிறது. மற்றும் 60 அகவைக்கு மேற்பட்ட 57 ஆயிரத்து 306 முதியவர்களும் நேற்று வரையிலான கொரோனா பாதிப்பில் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 57 பேரும், தனியார் மருத்துவ மனைகளில் 41 பேரும் என மொத்தம் 98 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், கன்னியாகுமரியில் 9 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் தலா 5 பேரும், சேலத்தில் 4 பேரும், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், நெல்லை, திருப்பூர், விழுப்புரத்தில் தலா 3 பேரும், கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், தேனி, திருப்பத்தூர், திருச்சி, வேலூரில் தலா 2 பேரும், ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 7,516 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 891 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,587 பேரும், கடலூரில் 404 பேரும், செங்கல்பட்டில் 396 பேரும், திருவள்ளூரில் 315 பேரும், தென்காசியில் 276 பேரும் அடங்குவர். இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 52 ஆயிரத்து 380 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 921 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 854 பேரும், தொடர்வண்டி மூலம் வந்த 428 பேரும், சாலை வழியாக வந்த 4 ஆயிரத்து 132 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு தனியார் நிறுவனம் மற்றும் ஒரு அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 64 அரசு மற்றும் 90 தனியார் என 154 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தாம் தமிழகத்தில் விண்ணப்பித்த மாணவர்களில் ஐம்பது விழுக்காட்டினரே கலந்து கொண்ட நடுவண் பொறியியல் தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டங்களுக்குள்ளாக பொதுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. அடுத்த கிழமை கடந்த ஆண்டைவிட 13 விழுக்காட்டினர் குறைவாக விண்ணப்பித்துள்ள அடாவடி நீட் தேர்வை நடுவண் பாஜக அரசு நடத்தவிருக்கிறது. திங்கட் கிழமையிலிருந்து மாவட்டங்களுக்க வெளியிலும் பொதுப் போக்குவரத்தை தமிழக அரசு தொடங்குகிறது. ஆனால் நூறு நூற்றி ஐம்பது பேர்கள் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சமூக இடைவெளிக்கான அமைப்பாக பைக்கில் வந்தவர்களை காவல்துறையினரால் நடுத்தெருவில் நிறுத்தி தோப்புக்கரணம் எல்லாம் போட வைத்ததும் தமிழக மக்களின் கண்களை விட்டு அகலமாட்டாத வரலாற்று மூடத்தனமாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



