பாஜகவில் இணைந்த குஷ்பு முதல் வேலையாக காங்கிரசை அவமதிப்பதாக, மாற்றுத் திறனாளிகளை அவமதித்து கருத்து வெளியிட்டது சர்ச்சையாகி வருகிறது. 28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: முந்தா நாள் டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைந்த நிலையில், நேற்று சென்னை வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும்? சிந்திக்கக் கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்’ என்று கடுமையாக விமர்சித்தார். குஷ்பு இவ்வாறு பேசியதற்கு டிசம்பர் 3 இயக்கம் தனது கண்டனத்தை உடனடியாக தெரிவித்தது:- ஒரு கட்சியை சார்ந்தவர்கள் இன்னொரு கட்சியை விமர்சிக்கலாம். அது தவறில்லை. ஆனால், மூளை வளர்ச்சியின்மை தன்மையை பயன்படுத்தி குஷ்பு விமர்சித்துள்ளது தவறு. அதனைக் கடுமையாக எதிர்க்கிறோம். இயலாமை இயற்கையின் அங்கம். அதை வைத்து அரசியல் எதிரியை விமர்சிப்பது முறையா? இதுவா அரசியல் நாகரீகம்? குஷ்பு மன்னிப்பு தெரிவிக்கணும் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும் குஷ்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் குஷ்பு மீது காவல்துறையிலும் புகார் தந்துள்ளது. இது சம்பந்தமாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது: பாஜகவில் இணைந்த திரைக்கலைஞர் குஷ்பு சுந்தர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று பேசியுள்ளார். மாற்றுதிறனாளிகளுக்கு எதிரான சட்டவிரோத மற்றும் தண்டனைக்குரிய தனது கருத்திற்கு வருத்தமோ, மறுப்போ குஷ்பு இதுவரை தெரிவிக்கவில்லை. மாற்று திறனாளிகளைத் தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியதால் அவருடைய இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளிகளை அவமானப்படுத்தும் சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும். மாற்று திறனாளிளை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் உண்டு. எனவே மாநிலம் முழுவதும் தங்களுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழுக்கள் சார்பில் உடனடியாக புகார் அளிக்கவும் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தவும் சங்கத்தின தலைமை முடிவு செய்துள்ளது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



