Show all

மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு! மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டு வருகிறார்.

இன்று 2-வது நாளாக பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடந்த கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கருத்துப்பரப்புதல்  தமிழகம் முழுவதும் என்ற இலக்கில் கருத்துப்பரப்புதல் நடத்தி வருகிறேன். இந்த கூட்டம் நடத்துவதற்கு முதன்மைக் காரணம். அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுக்களாக வாங்கி அதனை தீர்த்து கொடுக்க வேண்டும் என்பது தான்.

இதுவரை 133 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற்றுள்ளேன். 234 தொகுதிகளுக்கு செல்ல நான் முடிவு செய்துள்ளேன். இந்த உங்கள் தொகுதியில் இந்தக் கருத்துப்பரப்புதல் கூட்டத்தை அதிகளவில் ஆளும் கட்சியினர் பார்த்து வருகிறார்கள். அவர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. அப்படியாவது அவர்களுக்கு முனைப்பு வரவேண்டும் என்றே விரும்புகிறேன்.

நீங்கள் பெட்டியில் போட்டுள்ள மனுக்களுக்கு உரிய ஆவணமாக ஒரு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டையை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்து விடுவோம். வந்த மறுநாளே இந்த பெட்டிகள் திறக்கப்பட்டு உங்கள் சிக்கல்கள் தீர்க்கப்படும். 100 நாளில் எல்லா மனுக்களையும் தீர்க்க முடியுமா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் தீர்த்து கொடுப்போம். அப்படி ஏதாவது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிந்தால் இந்த அட்டையை எடுத்து கொண்டு நீங்கள் கோட்டைக்கு வரலாம். கோட்டைக்கு ஏன் முதல்-அமைச்சர் அறைக்கே வந்து கேட்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் உண்மையான உழவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. கலைஞர் பணியாற்றியது போன்று நான் பணியாற்றுவேன். அதனால் உங்கள் சிக்கல்கள் விரைவில் தீர்ந்து விடும். பழங்குடியின மக்களுக்கு பல நலத்திட்டங்களை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே நான் சொன்னேன். தமிழகத்தில் நடக்கும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று. அது தற்போது நிரூபணமாகியுள்ளது. 

பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் தொடர்பு கிடையாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் அந்த கொடூரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததாக கூறினார். ஆனால் மேலும் 3 அதிமுக நிர்வாகிகளை ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. பொள்ளாச்சி கொடூரத்திற்கும் அதிமுகவிற்கும் தொடர்பு இருப்பதை ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை நிரூபித்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. மாறாக இதில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள்.

தற்போது கூட ஒரு காரை ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை கைப்பற்றியுள்ளது. அந்தக் கார் அதிமுக கவுன்சிலர் ஒருவரின் கார். இதை சொல்வதில் எனக்கு எந்தவித பயமோ, அச்சமோ இல்லை. துணிவிருந்திருந்தால் நீங்கள் வழக்கு போட்டு பாருங்கள். அதனை சந்திக்கவும் நான் தயாராக உள்ளேன். 

இந்த வழக்கில் உள்ள ஆட்கள் அனைவர் மீதும் ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அப்படி இல்லை என்றாலும் போகட்டும். இன்னும் சில மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கொடூரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டோம். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஸ்டாலினிடம் இருந்து தப்பவே முடியாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேட்டு போய் உள்ளது. திமுக ஆட்சி அமைத்ததும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அது சீரமைக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், குழந்தைகள் நலனுக்கு முதன்மைத்துவம் கொடுக்கப்படும்.

ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டுறவு சங்கங்களில் ஏழை உழவர்கள் வாங்கிய 5 பவுன் வரையிலான நகைகடனை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தோம். அந்தவகையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.