தமிழகத்திற்குப் பொருந்தாத வியூகத்தை முன்னெடுக்க திமுகவிற்கு பயிற்சியளித்த ஐபேக் நிறுவனம் தமிழக மக்களிடம் இருந்து பாடம் கற்று திமுகவிற்கு வியூகத்தை மாற்றிக் கொடுத்திருக்கிறது. 08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தமிழகத்தில் மட்டும், காலங்காலமாக ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகள் திராவிட இயக்கங்களை வீழ்த்த முடியாமைக்குக் காரணமாக தமிழக மக்கள் கொண்டாடுகிறவைகள்- சிறப்பாக திமுகவும், தொடர்ந்து அதிமுகவும் முன்னெடுத்து வரும்- ‘தமிழக அடையாளம், தனித்த தமிழக முன்னேற்றம்’ என்கிற அடிப்படைகளுக்கு இந்தியாவில் எந்த மாநிலமும் சாதிக்காத தனித்துவமாக தமிழகத்தில் சாதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டுமே. சிறப்பாக திமுகவும், தொடர்ந்து அதிமுகவும் முன்னெடுத்து வரும்- தமிழகத்தின் தனித்த முன்னேற்றத்கான- எல்லையில்லாத மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தெருக்கள்தோறும் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள், ஏழை மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியங்கள் மேலும் சமத்துவக் குடியிருப்புக்கள், இந்தியாவிலேயே மிக மிகச் சிறப்பாக தமிழகத்தில் இயக்கப்படும் குடும்ப அடையாள அட்டைகளுக்குப் பொருட்கள் சலுகைகள் வழங்குதல், பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவித்து வந்த அரசுப்பணிகளைப் பாமரர்களும் பெறும் வகையான அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், பல்வேறு விலையில்லாப் பொருட்கள், கடன் தள்ளுபடிகள், என்பனவைகளும்- தமிழக அடையாளங்களைத் தூக்கிப்பிடித்து வடக்கின் ஆதிக்கப் போக்குகளை அவ்வப்போது முறியடித்து வருவன மட்டுமேயாகும். ‘தேன்எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் எப்படி’ என்கிற சொலவடையைக் கொண்டாடும் தமிழக மக்களுக்கு- செயல்பாடே இல்லாவிட்டாலும் ஒன்றிய ஆட்சிக்கு முனையும் காங்கிரஸ் பாஜக கட்சிகளை அங்கீகரித்துக் கொண்டு, செயல்பாடுகளில் நேர்மைக்கு ஆர்ப்பரிக்கிற போக்குகளான இலஞ்சம் ஊழல் எதிர்ப்பு தமிழக மக்களுக்கு ஏற்புடையதானவைகள் அல்ல. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்- இந்தியா முழுவதும், பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற போதும், தமிழகத்தில் நிலைமை மாறியிருந்தது. திமுக கூட்டணி 38 தொகுதிகளில் ஒன்றை தவிர, அனைத்தையும் கைப்பற்றியது. அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்தது. பண மதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களால், மோடிக்கு எதிரான அலை வீசியது தான் காரணம் என, திமுக கூட்டணி கட்சிகள் குறிப்பிட்டன. இன்று, சட்டமன்றத் தேர்தலுக்கும் கிட்டத்தட்ட அதே கட்சிகள் கூட்டணியில் நீடிக்கும் நிலையில், திமுக மிகச்சிறப்பான வெற்றியை இயல்பாக தமிழகத்தில் ஈட்டிட முடியும் என்கிற நிலை இருக்கிறது. ஆனால் திமுக வெட்டியாக, தேர்தல் வெற்றி ஆலோசனைகளுக்கு ஐபேக் நிறுவனத்தை அமர்த்தியிருக்கிறது. மாநில நிருவாக குளறுபடிகளை மையப்படுத்தியும், தமிழக அமைச்சர்கள் ஊழலை சுட்டிக்காட்டியும் கருத்துப்பரப்புதல் செய்ய, திமுகவிற்கு ‘ஐபேக்’ நிறுவனம் ஆலோசனை வழங்கியது. அதையடுத்து, அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் தயாரித்து, ஆளுநரிடம் கொடுத்தார் ஸ்டாலின். ஊர் ஊராக திரைப்படத்திற்கு போல அரங்கு அமைத்து, பன்னீரார் ஊழல்... எடப்பாடியார் ஊழல்… என, முழங்கி வந்தார். இந்தியாவில் நிருவாகக் குளறுபடி ஊழல் என்பதெல்லாம்- ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற காங்கிரஸ் திமுகவையும், பாஜக அதிமுகவையும் மற்ற மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகளையும் காங்கிரசும் பாஜகவும், உருட்டி மிரட்டி வருமான வரித்துறை, நடைமுறையாக்கத் துறைகளை ஏவி, பணியவைப்பதற்கான ஆயுதமாகவே பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன. மாநில நிருவாக குளறுபடிகளை மையப்படுத்தியும், தமிழக அமைச்சர்கள் ஊழலை சுட்டிக்காட்டியும் கருத்துப்பரப்புதல் செய்ய, திமுகவிற்கு ‘ஐபேக்’ நிறுவனம் வழங்கிய ஆலோசனை திமுகவிற்கு சிறுகுறு ஆணிகளைக்கூட பிடுங்கப் பயன்படவில்லை என்பதே உண்மை. இவற்றைத் திமுக புரிந்து கெண்டு ஐபேக் நிறுவனத்திடம் புலம்ப தற்போது ஐபேக் நிறுவனம் வியுகத்தை மாற்றி சரியான பாதையில் திமுக பயணிக்க வழிவிட்டு கொடுத்திருக்கிறது. இதனால் மதுரை மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு, வேறு பாதைக்குத் திரும்பியது. மோடியையும் அவரது அரசையும் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார். எடப்பாடி அவரது அரசு மீதான விமர்சனத்தில் கடுமை குறைந்திருக்கிறது. அதற்கான நேரமும் குறைந்துள்ளது. தலைவரைப் பின்பற்றி கட்சியின் மற்ற பேச்சாளர்களும், ஒன்றிய அரசு மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். கந்த சஷ்டி கவசப் பாடுகளுக்குப் பின், தொலைக்காட்சிகளில், பாஜகவை விமர்சிப்பதை தவிர்த்து வந்த, திமுக பேராளர்கள் மீண்டும், பாஜகவை கடுமையாக சாடத் தொடங்கி விட்டனர். ஊழலை பற்றி, திமுகவில் யார் பேசினாலும், தமிழக மக்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை என்று, ஐ-பேக் மிக மிகத் தாமதமாகத் தான் கண்டுபிடித்துள்ளது. வேறு எதை முன்வைத்து கருத்துப்பரப்புதல் செய்வது என, அவர்கள் திக்கு முக்காடி கொண்டிருந்த போது தான், பெட்ரோல் விலை, 100 ரூபாயை தொட்டது. டெல்லியில் வடஇந்திய உழவர்கள் போராட்டமும், தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் அதற்கான ஆதரவுப் போராட்டங்களும் பாஜக மீது அதிருப்தியை பரப்புகிறது. ஹிந்தி திணிப்பில் ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டும் செய்திகளும் வருகின்றன. எனவே, பாராளுமன்றத் தேர்தலைப் போலவே, இதிலும் மோடி எதிர்ப்பு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில், வியூகத்தை மாற்றி தந்துள்ளது, ஐ-பேக்.
திமுக ஆளுநரிடம் கொடுத்த புகார்களில், பெருமளவு ஒப்பந்தம் மீதான புகார்களாக உள்ளன. அது, தமிழக மக்களை தூசுப்படலமாகக்கூடச் சென்றடையவில்லை. இந்தியாவின் எந்த அதிகார மையத்திலும் இலஞ்சம் ஊழல் இல்லாத ஒற்றைச் சிறு துறையும் இல்லை என்பதை இந்தியாவில் தமிழக மக்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் அதன் வெளிபாடுதான் ‘தேன்எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் எப்படி’ என்கிற தமிழகச் சொலவடையாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.