கோவை நகை வணிகர்களுக்கு சொந்தமான, 149 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் பறக்கும் படை சோதனையை முறைப்படுத்த வேண்டி, கோவையில் 600 நகை வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் ஒளிப்பதிவு குழுவினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு நடத்தப்பட்ட தணிக்கையில், கோவையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வேனில் கொண்டு வந்த ரூ.49 கோடி மதிப்புள்ள 149 கிலோ எடை தங்கக் கட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கோவையில் உள்ள 7 தங்க நகை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் இருந்து தங்கக் கட்டிகள் வாங்கி வந்தது தெரியவந்தது. பின்னர் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதனால் கோவை நகை வணிகத்தின் இயல்புநிலை பாதிக்கப் பட்டது. பறக்கும் படையினரின் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பெரியகடை வீதி, குறுக்குவெட்டுச்சாலை, ஒப்பணக்கார வீதி, நகரமாளிகை, காந்திபுரம், 100 அடி சாலை பகுதிகளில் உள்ள சுமார் 600 நகைக் கடைகளை அடைத்து, உரிமையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியைச் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து கோவை தங்க நகை வணிகர்கள் சங்கத் தலைவர் பி.முத்து வெங்கட்ராமன:; கோவையில் உள்ள நகைக் கடைகளுக்கு தேவையான நகைகள் உரிய வரி செலுத்தி ஆவணங்களுடன்தான் கொண்டு வரப்படுகின்றன. தங்கம் வாங்கி வந்ததற்கான ஆவணங்களை பறக்கும் படையினர் ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். வருமானவரித் துறையினர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், தங்கத்தை திருப்பிக் கொடுப்பதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனாலும் திருப்பி கொடுக்கவில்லை. ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். வணிகர்களும்;, அதிகாரிகளும் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளோம். அதிகாரிகளின் பணிகள் பாதிக்காத வகையில் நாங்கள் ஒத்துழைப்பு அளிப் போம். அதேபோல் தங்க நகை வணிகளின்களின் வர்த்தகம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படையின் பறிமுதல் நடவடிக்கையைக் கண்டித்து கடைகளை அடைத்து போராட் டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் இன்று அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிஇலாபம் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,115.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.