நமிதா, குஷ்பு வரிசையில் வனிதா பாஜகவின் அடுத்தகட்ட அதிரடி என்று தமிழக பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்றாரா வனிதா பாஜகவிற்கு? 10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒவ்வொரு மாநிலங்களிலும் பேரறிமுகங்களைக் கட்சியில் இணைத்து வருகிறது பாஜக. தமிழ்நாட்டில் நோட்டாவை வெற்றி கொள்வதற்கே வலிமை பெறாத கட்சியாக இருந்த போதிலும், தன்னைப் பற்றிய விவாதம் நடைபெறும் சூழலை அந்தக் கட்சி உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கங்கை அமரனை கட்சியில் இணைத்ததை தொடர்ந்து பல திரை மின்மினிகளையும் இணைத்து வருகிறது. இராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் மாநில அளவில் பொறுப்பிலும் உள்ளனர். அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார் குஷ்பு. அப்போதிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். போதாக் குறைக்கு, தான் உண்டு தன் கட்சியுண்டு என்று இருந்த திருமாவளவனை வம்புக்கு இழுத்து, தற்போது விடுதலைச் சிறுத்தைகள், தங்கள் கட்சியின் பெரியாரிய நிலைப்பாடு, ஹிந்துத்துவா ஆதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை களத்தில் இறங்கி விளக்கிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக சுழன்றடித்த வேகத்தை விடுதலை சிறுத்தைகளால் முன்னெடுக்க முடியாது என்றாலும், பாஜகவின் அடாவடி அடிப்படைகளை சம்மட்டி கொண்டு தாக்கி வருகிறது. ஆதிக்கவாத ஹிந்துத்துவாவின் சட்ட நூலான மனுஸ்மிருதியை தடை செய்யக் கோருவது நல்ல தாக்கந்தான். இந்நிலையில்தான், வனிதா விஜயகுமாரையும் இணைக்க பாஜக கட்சித் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விரைவில் அவர் இணைவார் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். பாஜக பொதுக் கூட்டங்கள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், வரவிருக்கும் தேர்தல் கருத்துப்பரப்புதல்களில், வனிதாவை களமிறக்க பாஜக அதிரடி திட்டம் போட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. ஆனால், தற்போதுவரை வனிதா தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



