உயிர், மெய்யைத் தொடர்ந்து ஆயுதத்திற்கும் ஒரு எழுத்தை வைத்த தமிழன், யாருடையது எவருடையது என்று பாராமல் சிறப்பாக முன்னெடுத்து வருகிறான் ஆயுதத்திற்கான பூசையை. ஆம் இன்று ஆயுதபூசை! 09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று ஆயுதபூசை! தமிழகம் முழுவதும் கடைகள், அலுவலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் பழங்கள், பூக்கள், பொரி போன்ற பொருட்கள் வைத்து தொழிற் கருவிகளைப் போற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஒரு கிழமையாகவே சென்னை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு நகரங்களில் ஆயுத பூசைக்கு தேவையான பூ, பழங்கள், பொறி போன்ற பொருட்கள் விற்பனை களைகட்டியது. கடைசி நாளான நேற்று விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. விடிந்தால் ஆயுத பூசை என்பதால், ஏராளமான மக்கள் சந்தைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான பழங்கள், தேங்காய்க்கள், வாழை மரங்கள், பொரி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி உள்பட என பூசை பொருட்கள் அனைத்தையும் வாங்கி சென்றனர். இதனால் பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, சாத்துக்குடி 50 முதல் 70 வரையிலும், கொய்யா 50 முதல் 60 ரூபாய் வரையிலும், திராட்சை 80 ரூபாய்வரையிலும், வாழைத்தார் 250 முதல் 500 ரூபாய் வரையிலும் விற்பனையாகின. அனைத்து பழங்களும் கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை அதிகமாக விற்கப்பட்டன. இதேபோல் சென்னையில் பூ விலையிலும் 3 மடங்கு உயர்வு இருந்தது. மல்லிகை பூ 1 கிலோ ரூ.900 வரையிலும் பீச்சிப்பூ 600 ரூபாய் என்றும், சாமந்தி பூ 100 ரூபாய் ஆகவும், அரளி பூ 300 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. சில்லறை பூ விற்பனையில் இதை விட 20 ரூபாய் அதிகமாக விற்கப்பட்டது. இதேபோல் பொரி ஒரு படி ரூ.20, அவல் ஒரு கிலோ ரூ.100, வாழைக்கன்று ரூ.20, மாவிலை தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.20 முதல் ரூ.50 வரையிலும் விற்கப்பட்டன. விலை கொஞ்சம் அதிகமாக இருந்தபோதிலும், மக்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் வேண்டிய பூசைப் பொருட்களை, பழங்களை வாங்கி சென்றனர். இன்று வீடுகளில், கடைகளில், அலுவலங்கள், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் தூய்மை செய்யப்பட்டு, தொழிற்கருவிகளுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை படைத்து, உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பல்வேறு தொழிற்சாலைகள், வாகனங்கள் மின் விளக்குகளால் ஒளர்கின்றன. தமிழ்முன்னோர் வாழ்வாதரத்;தின் அடிப்படைகளான உழவும் தொழில் உற்பத்தியும் செழிப்பதற்கு- வணிகத்தை முன்னெடுக்கும் பொருட்டு- சமுதாயம் விழாமல் இருப்பதற்கு விழா- என்று விழாவை முன்னெடுத்தனர். உலகில்- விழாவின் முன்னோடியான தமிழன், மதமற்றவன் என்ற நிலையில்- மதக்காரணம் பாராமல், விழாக் காரணமான வணிகத்தை ஊக்குவிக்கும் முகமாக எல்லா மதவிழாக்களையும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறான். ஆம்! ஆயுதபூசைக் கொண்டாடும் யாருக்கும் அந்த ஆயுதபூசையை உருவாக்கியவர்கள் சொல்லும் மதக்காரணங்கள் தெரியவில்லை; மகிழ்ச்சி மட்டுந்தாம் தெரிந்தது. சலிக்காமல் எதார்த்தத்தை, இயல்பை சிந்திக்காமல் கதை கதையாய் அள்ளிவிடும் விக்கிப்பீடியாவில்தான் அறிந்து கொள்ள முடிந்தது மதக்காரணங்களை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



