Show all

அரசுப் பள்ளிகளில் 12ஆண்டுகளை கடந்து வரும் குறிஞ்சி மலர்களில்! அரசு மருத்துவக் கல்லுரிகளில் ஒருவருக்குக் கூட இடம் இல்லை

நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவர்கள் ஆகப் போகிறார்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை தகர்த்துள்ளது கள நிலவரம்.

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவர்கள் ஆகப் போகிறார்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை தகர்த்துள்ளது கள நிலவரம்.

நாடு முழுமைக்கும் பொதுவான நுழைவு தேர்வாக நீட் என்ற தேர்வை, மோடி அரசு ஒன்றியத்தில் பதவிக்கு வந்த பிறகு, கொண்டு வந்தது. இதன் பாடத் திட்டம் வேறு, தமிழக அரசு பள்ளிகளின் பாடத் திட்டங்கள் வேறு என்பதால், இது நியாயமற்ற தேர்வு என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

முன்பு 12ம் வகுப்பு மதிப்பெண்கள், அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்த நிலையில், இப்போது ஒன்றிய அளவிலான ஒரு பொது நுழைவுத் தேர்வு ஏழை, எளிய மற்றும், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்து வருகிறது.

நீட் தேர்வில் 720க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி. ஆனால் தேர்ச்சி பெறுவோர் எல்லோருக்கும் மருத்துவர் இடம் கிடைக்காது. 

இந்தியாவில் இருக்கிற மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் அடிப்படையில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை நிர்ணயித்து இதற்கு மேல் பெற்றால்தான் மருத்துவர் படிப்புக்கு இடம் தர முடியும் என்பதுதான் கட்-ஆப். எனவே தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. கட்-ஆப் மதிப்பெண்ணை விட அதிகம் எடுக்க வேண்டும். 

இவ்வாண்டு, தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்களில் நீட்டில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு, நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்தியது. இப்படியான பயிற்சி மையத்தில் படித்து 500க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 4 பேர்தான். மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 2 பேர் முறையே 495 மற்றும் 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், இரு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மருத்துவ இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் எழுதியதில், வெறும் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

இப்போதுள்ள நிலவரப்படி வெறும் 8 மாணவர்களுக்குத்தான் மருத்துவ கல்வி வாய்ப்பே கிடைக்கும். எனவேதான் தமிழக அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது பல ஏழை, எளிய மாணவர்களுக்கு பலன் கொடுக்கும். இதுவரை ஆளுநர் இதற்கு ஒப்புதல் தரவில்லை. ஒப்புதல் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரிவிக்க இன்னும் 27 நாட்கள் காலக்கெடு கேட்டிருக்கிறார் ஆளுநர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.