Show all

பூனைக்கு மணி கட்டினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி! அரசு செலவில் ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்று கட்சி விளம்பரம்

ஒட்டுமொத்த அதிமுக ஆட்சிகால சாதனையை, எடப்பாடியார் சாதனை போல, ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் அரசு செலவில் கட்சிக்கு விளம்பரம் தேடப்பட்டு வருவதை, அதிர்ச்சியோடு பார்த்த மக்கள், யார் இதைத் தடுப்பது என்று புலம்பி வந்த நிலையில்,  பூனைக்கு மணி கட்டினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒட்டுமொத்த அதிமுக ஆட்சிகால சாதனையை, எடப்பாடியார் சாதனை போல, ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் விளம்பரம் தேடிவருகிறது அதிமுக, மிகவிரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதுவும் அரசு செலவில்.

ஒட்டுமொத்த அதிமுக ஆட்சிகால சாதனையை, எடப்பாடியார் சாதனை போல, ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் அரசு செலவில் கட்சிக்கு விளம்பரம் தேடப்பட்டு வருவதை, அதிர்ச்சியோடு பார்த்த பொதுமக்கள், ‘யார் இதைத் தடுப்பது’ என்று புலம்பி வந்த நிலையில்,  பூனைக்கு மணி கட்டியுள்ளனர் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும்.

இந்த விளம்பரத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், பதிகை செய்திருந்த வழக்கு மனுவில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், இதழ்கள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்குத்; தடை விதிக்க வேண்டும். விளம்பரம் வெளியிடுவதற்கான தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை அறங்கூற்றுவர் சஞ்சீவ் பானர்ஜி, அறங்கூற்றுவர் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், ‛மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி, விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும், எனக்கூறினார். தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் இராஜகோபால், ‛இந்தப்பாடு தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் பெற்றுள்ளோம். அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதால், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க போதிய காலம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

தமிழக அரசு தரப்பில் அணியமான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில், ‛விளம்பரங்களுக்கு சரக்குசேவை வரியுடன் சேர்த்து ரூ.64.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இந்த விளம்பரங்கள் வழங்குவது, நான்கு நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, நடத்தை விதிகள் நடைமுறைக்கு வரவில்லை. இது சம்பந்தமாக விரிவான பதில் மனு பதிகை செய்ய காலம் வழங்க வேண்டும் எனக் கோரினார். இதனையடுத்து, தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட அறங்கூற்றுவர் விசாரணையை அடுத்துவரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.