Show all

பட்டதாரி வாலிபர் அசத்தல்! பணம் வழங்கும் தானியங்கி இயந்திரம் போல, பால் வழங்கும் தானியங்கி இயந்திரம்!

திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். இது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். இது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் விபு, 27; அகவை பொறியியல் பட்டதாரி. இவர், மேற்கு மாடவீதியில், புது முயற்சியாக, தானியங்கி இயந்திரம் மூலம், பால் விற்பனை செய்யும், விற்பனையகம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

மாதவரத்தில், பசுமாடு வைத்திருப்போரிடம், பசுப்பால் வாங்கி, இயந்திரத்தில் நிரப்பி, 4 டிகிரி செல்ஷியஸ் நிலையில், பதப்படுத்தப்படுகிறது.

வாடிக்கையாளர், இயந்திரத்தின் பணம் நுழைக்கும் பகுதியில், 10 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும், பணம் செலுத்தி, பாத்திரங்களில் பசுப்பால் பிடித்து செல்லலாம். 1 லிட்டர் பாலின் விலை, 64 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர, விற்பனையகம் சார்பில் வழங்கப்படும், பணமேற்றிய அட்டையைப் பயன்படுத்தி, இயந்திரத்தில் பசுப்பால் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இது குறித்து, விபு கூறியதாவது: கொரோனாவிற்கு, மக்கள் எதிர்ப்பு சக்தி பெற, தூய பசுப்பால் விற்பனையகம் தொடங்கியுள்ளேன். 24 மணி நேரமும், பால் வழங்கும் தானியங்கி இயந்திரத்தைச் செயல்படுத்துவதே இலக்கு. தற்போது, கொரோனா பரவலால், மாலை, 7:00 மணி வரை மட்டுமே, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் நிறுவ, 4.5 லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. மேலும், பசு மாடுகளை வாங்கி, பசுப்பால் தங்கு தடையின்றி விற்பனை செய்யப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.