144 தடை உத்தரவைப் பயன்படுத்தி மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்ட ஐயப்பன், டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நிலையில், காவல்துறையில் சிக்கிக் கொண்டார். 20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பரவலைத் தடுக்கும் நோக்கமாக தெரிவித்து, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டாயத் தேவையில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்தச் சூழலில் திருவொற்றியூர் பகுதியில் வாலிபர் ஒருவர் அடிக்கடி பைக்கில் செல்வதைக் கவனித்த காவல்துறையினர் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த வாலிபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ஐயப்பன், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இவர் மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றிவருகிறார். மேலும், அவரின் பைக்கின் சீட்டுக்கு அடியில் 12 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதுதொடர்பாக ஐயப்பனிடம் விசாரித்தபோது 144 தடை உத்தரவுக்கு முன் டாஸ்மாக் கடையிலிருந்து ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி காருக்குள் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து உதவி கண்காணிப்பாளர் ஆனந்தகுமார், ஆய்வாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் ஐயப்பனின் காரில் பதுக்கி வைத்திருந்த 780 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மதுபானங்களை விற்க பயன்படுத்தப்பட்ட கார், பைக் ஆகியவற்றையும் மீட்ட காவல்துறையினர் ஐயப்பனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபானங்கள் கள்ளச்சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. 144 தடை உத்தரவைப் பயன்படுத்தி மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்ட ஐயப்பன், டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டார். தற்போது மதுபானங்கள் கிடைக்காததால் மதுப்பிரியர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளார். மதுபானம் தேவைப்படுவோர்கள், ஐயப்பனை பேசியில் அழைத்தால், அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று கொடுத்து வந்துள்ளார். பைக்கின் சீட்டுக்கு அடியில் 12 மதுபாட்டில்களை வணிகத்திற்கு எடுத்துச் சென்றபோதுதான் ஐயப்பன் சிக்கிக்கொண்டார். குவாட்டர் பாட்டிலை 400 ரூபாய் வரை விற்றுவந்துள்ளார் என்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



