திமுகவுக்குப் போட்டியாக, அதிமுக கிளைத்ததில் இருந்து- நடுவண் அரசில், ஆட்சியேற்கும் கட்சிக்கு, இரண்டு கட்சிகளும் மாறி மாறி கால் பிடித்து தங்களை வளமைப் படுத்திக் கொள்வதையே இலட்சியமாக்கிக் கொண்டனர். தங்கள் கட்சிகளின் அடிப்டை கொள்கையான தமிழர் முன்னேற்றம், தமிழர் வாழ்மானம் எல்லாம் இரண்டாம் பட்சமாகிப் போனதால், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற முழக்கம் மீண்டும் தேவைப் படுவதாகிறது. அந்த வகையாகவே #தமிழகவேலைதமிழருக்கே! என்ற முழக்கம் தலைப்பாக்கப் பட்டிருக்கிறது. 21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,142.
இதனால், #தமிழகவேலைதமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தலைப்பாக்க களமிறங்கியுள்ளனர் தமிழர்கள். கீச்சிவில் பலஇலட்சம் தமிழர்கள் இந்த முழக்கத்தில், தங்கள் ஆதங்கத்தைப் பதிவிட்டு நேற்றும் இன்றும் தலைப்பாக்கி வருகின்றனர். இது, இந்திய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
#தமிழகவேலைதமிழருக்கே! இதுதான் நேற்றும் இன்றும் தலைப்பான முழக்கம். தமிழகத்தில் ஏராளாமான பட்டதாரிகள் படித்து முடித்துவிட்டு, வேலையில்லாமல் திண்டாடிவருகின்றனர். தான் படித்த வேலை கிடைக்கவில்லை என்பதால், தற்காலிக வேலைகளை நோக்கி நகரும் சூழலுக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. தனியார் உணவு விநியோக செயலிகளில் 60 விழுக்காட்டிற்கு மேல் படித்த பட்டதாரி இளைஞர்கள் களம் இறங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
படித்த படிப்புக்கான சரியான வேலை இல்லாததே இதற்கான முதன்மையான காரணமாக முன்வைக்கப்படுகிறது. இப்படி தற்காலிகமான வேலைகளில் அவர்கள் பணியாற்றும்போது, அவர்களுக்கு எந்தவித பணிப் பாதுகாப்பும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
சொல்லப்போனால், அவர்கள் வேலையில் இருப்பதற்கான ஆதாரம் கூட இல்லை. இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சியில் கோபியின் நீயாநானா நிகழ்ச்சிகூட நடத்தப் பெற்று தமிழக இளைஞர்களின் அவலம் பொது மக்கள் தளத்தில் உணர்த்தப் பட்டது.
நிலையான வேலையைத்தேடி லட்சகணக்கில் தமிழக இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு மற்றும் தனியார் வேலைகளில் வடமாநிலத்தவர் ஆக்கிரமிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
அண்மையில் தென்னக தொடர்வண்டித் துறை திருச்சி கோட்டத்தில், தொழில் பழகுநருக்கான 1,765 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில், 1,600 இடங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
'தமிழர்களின் வேலைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன' என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், திருச்சியில் நடந்த இன்றைய போராட்டம், இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் நடுவண் அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களில் 99 விழுக்காட்டினர் வட இந்தியர்கள்தான். என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. தமிழக இளைஞர்கள் பலர் நடுவண், மாநில அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதிவிட்டு, வேலை கிடைத்துவிடும் என்ற கனவுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் அரசுப் பணிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாகவே உள்ளது.
திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை பணிமனையில் பயிற்சியில் ஈடுபட்டுவரும் 300 வட மாநிலத்தவரின் பணி ஆணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும், அந்த வேலை தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து, தமிழ் தேசிய பேரியக்கம், நாம் தமிழர் கட்சி, மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம்தான் கீச்சுவில் எதிரொலித்தது.
இந்திய அளவில், #தமிழகவேலைதமிழருக்கே! என்ற முழக்கம் கிச்சுவில் தலைப்பானது.
அரசு அலுவலகங்கள், மக்கள் சார்ந்த அரசின் நிர்வாகத்தோடு தொடர்புடையது. 'அரசு வேலைகளுக்கு, முதன்மைத்தகுதி அந்தந்தப் பகுதியின் மண்ணின் மொழி' இது உலகம் முழுவதும் பின்பற்றப் பட்டுவரும் நடைமுறை.
நடுவண் அரசில், ஆட்சியேற்கும் கட்சிக்கு, இரண்டு தமிழக கட்சிகளும் மாறி மாறி கால் பிடித்து தங்களை வளமைப் படுத்திக் கொள்வதையே இலட்சியமாக்கிக் கொண்ட ஆட்சிகளே தமிழகத்தில் நடக்கிற நிலையில், மொழி தெரியாத வங்கி ஊழியரோ, மருத்துவரோ, அரசு அதிகாரிகளோ தமிழகத்தில் மட்டுந்தாம் பார்க்க முடிகிறது.
#தமிழகவேலைதமிழருக்கே! என்ற முழக்கம் யாருக்கும் எதிரானது அல்ல. குடும்பத் தேவைக்காக, வயிற்றுப்பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்கு வரும் சராசரி மனிதர்களுக்கு எதிரானது அல்ல. இந்த முழக்கம் தமிழ்நாடு அரசுப் பணியிடங்கள், மைய அரசு அலுவலங்களில் திட்டமிட்டு பறிக்கப்படும் சதிகளுக்கு எதிரானது என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன. பலரும் இந்த கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில், சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.