Show all

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வணிகம் மந்தம்! தொடருமாம் இன்னும் 4கிழமைகளுக்கு; தேர்தல் நடத்தைவிதி காரணம்

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை ஒட்டிய பகுதியில் வியாழக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு கிழமைகளாக வணிகம் மந்தமாம். தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பது காரணமாம்.

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரோடு கருங்கல்பாளையம், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு 350 பசுமாடுகள், 250 எருமை மாடுகள், 150 வளர்ப்பு கன்றுகள் என குறைந்த அளவிலேயே மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 80 விழுக்காட்டு மாடுகள் 3 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே விற்பனையாகின. 
வழக்கமாக நடப்பு மாதங்களில் பல மாநிலங்களில் மாடுகள் வாங்குவதற்காக கடனுதவி அளிப்பார்கள். இதனால் மாட்டுச்சந்தையில் மாடுகளை வாங்குவதற்காக அதிகமாக வியாபாரிகள் வருவார்கள். தற்போது தேர்தல் நடந்து வருவதால் மாடுகள் வாங்க வழங்கப்படும் கடனுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாடுகள் வாங்க வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது. வழக்கமாக இந்த மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்படும் மாடுகளும் மிக அதிகமாக இருந்திருக்கும். கொண்டுவரப்படும்  மாடுகளில் 95 விழுக்காடு மாடுகள் விற்பனையும் ஆகியிருக்கும்.
வெளி மாநில வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் மாடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. இது குறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக உள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும் தேர்தல் விதிமுறைகள் இன்னும் அமுலில் உள்ளது. இதனால் அதிகமாக பணத்தை கொண்டு வருவதற்கு பயந்துதான் வருகிறார்கள். வெளி மாநிலங்களிலும் தேர்தல் நடப்பதால் அங்கிருந்து வியாபாரிகள் வருவது குறைந்துள்ளது. மாடுகள் வாங்குவதற்காக கடனுதவிகளை பல மாநிலங்களில் கொடுத்து வருகிறார்கள். தற்போது தேர்தலை காரணம் காட்டி கடனுதவிகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் கடனுதவியில் மாடுகள் வாங்கும் விற்பனைக்கு வாய்ப்புகள் இல்லை. 
அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த முடிவுகள் அறிக்கப்பட்ட பிறகே மாட்டுச்சந்தையில் வழக்கமான விற்பனை இருக்கும் எனத் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,141.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.