13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பனிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்பதோ, மருத்துவம் படிக்க முடியவில்லையே யென்று கவலை கொள்வதோ யில்லை. இடம் கிரயம் செய்யும் போது சில பகுதிகளில் அந்தப் பகுதி தாதாவைக் கவனித்தால் தான் இடம் கிரயம் செய்ய முடியும் என்பது போல் இருக்கிறது. மருத்துவக் கல்வி பயில்வதற்கு 12 வகுப்பு வரை படித்து விட்டு சம்பந்த மில்லாமல் நடுவண் அரசு தாதாவின் நீட் தேர்வை எதர் கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை. பனிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் போதுமானது; அந்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு தேர்வு செய்து வந்த வரை இது போன்ற இயலாமை, தற்கொலை எல்லாம் நடக்கவில்லையே. எதற்காக நடுவண் அரசுக்கு இந்தச் சட்டாம்பிள்ளை வேளை. நேற்று அனிதாவை காவு கொடுத்தோம். இன்று கெவின்! முகத்தில் பாலிதீன் கவரை கட்டிக்கொண்டு மாணவர் கெவின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பிள்ளைகளை மருத்துவராக்கி பார்க்க கனவுகாணும் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தமிழ் சங்க சாலையைச் சேர்ந்தவர் லாரன்ஸ். கருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பொறியாளராகப் பணிபுரிகிறார். அவரது மகன் கெவின்ஹரி, கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1056 மதிப்பெண் பெற்றிருக்கிறார். மருத்துவம் பயில ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதி 213 மதிப்பெண் எடுத்திருக்கிறார். ஆனால் அவரால் மருத்துவம் சேர முடியவில்லை. இதனால் பெற்றோரிடம் எப்படியாவது நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகி விடுவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். எனவே கெவினுக்கு வீட்டில் படிப்பதற்காக தனி அறை ஒதுக்கிக் கொடுத்ததுடன், மேலும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். கெவினும் விடிய, விடிய படித்துக் கொண்டிருப்பாராம். இதை தவிர நீட் தேர்வு எழுத, சேலத்திலுள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்றும் வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி வரை கெவின் படித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, தாய் மேரி ரோஸ்லின், அவரது அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் கதவு உட்புறமாக பூட்டியிருந்ததால், நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த லாரன்ஸ், கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது, தலையிலிருந்து கழுத்து வரை பிளாஸ்டிக் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு, ஷூ கயிற்றால் கழுத்தைக் கட்டி மூச்சுத்திணறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். அனிதாவுக்கு வந்த நிலை இன்னொருவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்பதற்குள் அடுத்த மரணம் நம்மை உலுக்கி போட்டு விட்டது. நடுவண் அரசு மாணவர்கள் மீது செலுத்தும் இந்த கல்வி வன்முறைக்கு என்று தீர்வு ஏற்பட போகிறதோ தெரியவில்லை. அனிதாவின் மரணத்தின்போது, யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக பொதுமக்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராடி கதறியும் மோடி அரசின் காதுகளில் இதுவரை விழாமல் உள்ளது. ஒரு தலைமுறையின் பெருங்கனவையே இந்த தேசம் சிதைத்து கொண்டிருக்கிறது வேதனையளிக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,769.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



