கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது உலகவங்கி. அதன் பொருட்டு 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட உலக வங்கி திட்டம் வகுத்துள்ளது. 08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா, சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 164 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவிற்கு எதிராக அந்ததந்த அரசுகள் முறையான திட்டமிடலோ உரிய நிவாரணமோ இல்லாமல், மக்கள் விலைகொடுப்பில்- ஊரடங்கையே முதன்மையான நடவடிக்கையாக முன்னெடுத்து வருகின்றன. இதனால் மக்கள் தொழில் அடிப்படையாக, வருமான அடிப்படையாக மிகவும் பாதித்து வருகின்றனர். வருமான இழப்பு அவர்களை கடனாளிகாளாக மாற்றியுள்ளது. தொழில் முனைவோர்களை தொழில் இழந்தவர்களாக மாற்றியுள்ளது. இந்தப் பாதிப்புகளை முழுவதும் கொரோனா மீதே ஏற்றி, 'கொரோனா நுண்ணுயிரி உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால், உலகெங்கும் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்” என, உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளதாவது: உலக வங்கி மூலம் தற்போது, 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்; பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நுண்ணுயிரி உண்டாக்கியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். கொரோனாவால் உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள், தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர். இதனால், அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் நாடுகளில் அடுத்த, 15 மாதங்களுக்கு, 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் (160 பில்லியன்) செலவிடத் திட்டமிட்டுள்ளோம். அரசுகளும் அமைப்புகளும் பகைமையை மறந்து, வறுமை ஒழிப்பில் தீவிரமாக செயல்பட வேண்டிய காலம் இது. இவ்வாறு டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



