Show all

எதிர்காலத்தில் அதிமுக இருக்குமா

தமிழகத்தில் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டில் சாதனையென்று எதுமில்லை.

     எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது செயலலிதா தலைமையிலான அதிமுக.

     முதல் 4 மாதங்கள் செயலலிதா தமிழகத்தை ஆண்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ நகர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. அதற்கப்புறம் கேட்கவா வேண்டும்.

     அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5ல் மரணமடைந்தார். செயலலிதாவிற்குப் பின்னர் பன்னீர்செல்வம், பழனிச்சாமி என இரண்டு முதல்வர்கள் மாறிவிட்டனர். இந்த ஓராண்டில் ஒரு சாதனையும் இல்லை.

     இந்த ஓராண்டிற்குள் தமிழக மாணவர்களின் தலையாய பிரச்சனையான நீட் தேர்வு ஊத்தி மூடப்பட்டுவிட்டது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை அவசர காலகட்டத்தின் போது மத்திய பட்டியலுக்கு சென்றது.

     ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பியும் அதற்கான ஒப்புதலை வழங்காமல் நடுவண் அரசு இழுத்தடித்தது. மாநில முதல்வர் டெல்லிக்கு சென்று நீட் தேர்வு குறித்து பிரதமரை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சிரித்து பேசிவிட்டு வந்துவிட்டார். நீட் தேர்வு விசயத்தில் பிரதமர் மோடி நினைத்தது நடந்தது. இதனால் பாழாகப் போவது தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்களின் எதிர் காலம்தான்.

     அதே போல்தான் நெடுவாசல் பிரச்சனையும் அந்தோ கதி என்று நடுரோட்டில் நின்று இன்றும் நெடுவாசல் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 40 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தற்காலிகமாக நெடுவாசல் மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நிறுத்தி வைத்தனர்.

     ஆனால், என்ன செய்தது நடுவண் அரசு? எப்போது மக்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனத்திடம் எரிவாயுவை எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டது.

     இதற்கெல்லாம் என்ன செய்தது தமிழக அரசு. ஒன்றுமே இல்லை. அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே மோடியை சந்தித்து வழிந்து வழிந்து பேசிவிட்டு வந்தார்களே ஒழிய, நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்சனைகளை குறித்து வாயும் திறப்பதில்லை.

     மோடியை பார்க்கும் போது, குனிந்து வணங்கி மோடியிடம் பேசிவிட்டு வருகிறார் நமது முதல்வர் பழனிச்சாமி. இவர்களுக்கெல்லாம் மாநில சுயாட்சி பற்றியோ, மாநில அரசுக்கு என்று ஒரு அதிகாரம் இருக்கிறது என்பது பற்றியோ தெரியுமா என்று கூட தெரியவில்லை.

     பாஜகவினருக்கும் நடுவண் அரசுக்கும் பணிந்து போவதால் இந்த நேரத்திற்கான பலனை வேண்டுமானால் அதிமுக அரசு அனுபவிக்கலாம். ஆனால், நீட், நெடுவாசல், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை கவனிக்கப்படாமல் விடுவது என்பது, அடுத்த முறை ஆட்சி செய்ய அதிமுக இருக்குமா? என்பது கேள்வி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.