Show all

மதுபானம் வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது! சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை அசத்தல் கேள்வி

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு பார் ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்று உள்ளது. இதனால் இந்த ஒப்பந்த ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் புதிய ஒப்பந்தம் விட ஆணையிட வேண்டும் என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனு பதிகை செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று அறங்கூற்றுவர்கள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, அகவை எய்தியவர்கள் மட்டும் மது வாங்குவதை உறுதி செய்ய ஆதார் அட்டையைக் கட்டாயம் ஆக்கலாமா என்பது குறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் இரண்டு கிழமைக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் அறங்கூற்றுவர்கள்.

டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றக் கூடாது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்திருக்கும் மதுபானக்கடைளை ஏன் மூடக் கூடாது என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.