Show all

புல்வாமா தாக்குதல் குறித்து வெளியான அடுத்த கட்ட துப்பு!

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள், சிறிநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடி பொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த வேன், நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில்,  44 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஜெயிசு இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. புல்வாமா தாக்குதலுக்கு முறையான முன் நடவடிக்கை இல்லாதது மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. 

இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு  அமைப்பு விசாரணை மேற்கொண்டுவருகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன், குண்டு வெடிப்பில் பல பாகங்களாகச் சிதறியது. ஆட்டோமொபைல் மற்றும் தடயவியல் நிபுணர்களைக்கொண்டு வேனின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், வேனை ஓட்டிவந்து தாக்குதல் நடத்தியவர் பெயர் ஆதில் அகமது தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. புலனாய்வு அமைப்பு தற்போது காரின் உரிமையாளரையும் கண்டுபிடித்துவிட்டது.

இந்த வேன் 7 முறை கைமாறி, கடைசியாக  சஜத்பட் என்பவரின் கைக்கு வந்தடைந்துள்ளது.  இவர் ஆனந்தநாக் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர். தாக்குதல் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அவர் வேனை வாங்கியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் காவல்துறை உதவியுடன் புலனாய்வு அமைப்பு சஜத் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியது. ஆனால், வீட்டில் அவர் இல்லை. தலைமறைவாகிவிட்டார். அவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவரா என்பதை விசாரித்து வருகின்றனர்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.