02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி தனது 3 அகவையிலேயே கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகள் சஞ்சனா. சிறுமி சஞ்சனா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். அண்மையில் சென்னை எம்ஜிஆர் ஜானகி கலைக்கல்லூரியில் இவரது கின்னஸ் சாதனை முயற்சி வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது. மூன்று அகவை சிறுமியான சஞ்சனா சுமார் 3 மணி நேரத்தில் 1111 அம்புகளை எய்து தனது அகவை கடந்த இலக்கை எட்டியுள்ளார். இதுகுறித்து சுட்டி சஞ்சனா பேசுகையில், இந்த முயற்சியின் போது தமக்கு சிறுதும் வலியோ அல்லது சோர்வோ ஏற்படவில்லை இல்லை என புன்னகையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சிறுமியை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைப்பதே தங்களது இலட்சியம் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். சஞ்சனா எய்த அம்புகள் மிகச்சரியாக இலக்கை எட்டியதுபோல், வெகுவிரைவில் தமிழக வீராங்கனையாக சஞ்சனா தனது இலக்கை எட்டுவார் என அனைவரும் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் பழந்தமிழகத்தில், கொல்லி மலையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் வல்வில் ஓரி என்பவர் ஆண்டு வந்தார். அறிவிலும், செல்வத்திலும், ஈகைக் குணத்திலும் சிறந்து விளங்கிய வள்ளல் பலருள் ஓரியும் ஒருவர். அவர் ஈகையில் சிறந்து விளங்கியது போலவே வீரத்திலும் சிறந்து விளங்கினார். இவர் அம்பு எய்தால் குறி தவறுவதில்லை. அவர் வைத்திருந்த வில்லும் வலிமை வாய்ந்தது. கூர்மையான அம்புகளால் அவர் அம்பு எய்தும் அழகே தனி. அதனாலேயே அவருக்கு 'வல்வில் ஓரி' என்ற பெயரும் ஏற்பட்டது. அவரிடம் விரைந்து செல்லக் கூடிய திறமையும், அழகுமுடைய குதிரையொன்றும் இருந்து. அந்தக் குதிரையின் பெயரைச் சொன்னாலே பகைவர்கள் அஞ்சும் அளவுக்கு இருந்தது. இவ்வாறு பல வகையிலும் புகழ் பெற்று விளங்கினார் ஓரி. கொல்லிமலை இயற்கை அழகு வாய்ந்தது. அழகிய பூக்களும், காய்களும், கனிகளும் நிரம்பி வழியும். எங்குப் பார்த்தாலும் தேன் கூடுகள் குடம் போல தொங்கிக் கொண்டிருக்கும். அருவிகளின் சலசலத்த ஓசை கேட்கும். மலையிலே வந்து படியும் மேகத்தைக் கண்டு மயில்கள் தோகை விரித்தாடும். இத்தகைய அழகு கொழிக்கும் மலை நாட்டை வல்வில் ஓரி ஆண்டு வந்தார். இப்படியான தமிழர் வரலாற்று பெருமைக்கு அணி சேர்க்கும் வகையாக, கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்ட சிறுமி சஞ்சனா, இன்றைய தமிழர் பெருமிதம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,883.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



