Show all

இயங்கலையை முடக்கி விட்டு, மின்கட்டணத்திற்கு இன்று கடைசி நாள் என்றால்- பணத்தை எந்தக் கோயில் உண்டியலில் போடுவது! மக்கள் கோபம்

மின்கட்டணத்தை இயங்கலையில் கட்டமுடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாளாம். மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகள், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டத்தில், அலுவலகத்தில் மின்சாரம் இல்லை என்று காலாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வெளியில் மக்கள் கொரோனா இடைவெளி காக்க முடியாமல் குவிந்து நிற்கிறார்கள். பணத்தை எந்தக் கோயில் உண்டியலில் போடுவது? மக்கள் கோபத்தில் கத்திவிட்டு கலைகிறார்கள்.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வீட்டு பயன்பாட்டு மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு தமிழக மக்கள் (அதுவும் குறிப்பாக சென்னையில்) யாரும் கால அவகாசம் எல்லாம் கேட்கவேயில்லை. சம்பளம் வராவிட்டாலும் ஏதாவது பொருளை விற்றுக்கூட செலுத்த அணியமாகவே இருக்கிறார்கள். ஏனென்றால்- மின்கட்டணக் கணக்கீட்டு முறை தமிழக மக்களை அப்படி அச்சுறுத்தி வைத்திருக்கிறது. இரண்டு தவணை சேர்த்து செலுத்தினால், இரண்டு மடங்கிற்கு பதிலாக மூன்று மடங்கோ நான்கு மடங்கோ கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 

அதனால், மின்கட்டணத்தை எப்படி கட்டுவது, யாரிடம் கட்டுவது என்று கேட்டு, கையோடு மின் அட்டையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, அன்றாடம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்னை மக்கள் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார்கள். 

தமிழ்நாடு மின்சார வாரியமோ வீட்டிற்கு வந்து கணக்கும் எடுக்காமல், இயங்லையையும் முடக்கி வைத்து விட்டு, மின் கட்டணத்தைச் செலுத்த தமிழக அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

இன்று சென்னை சித்தாலப்பாக்கம் மின்வாரிய அலுவலத்தில், மின்கட்டணம் செலுத்த என்று, மூன்று மணிவரை குவிந்த மக்கள், அலுவலகத்திற்குள் சென்று, உண்மையிலேயே இன்று கடைசிநாள்தானா என்று கேட்டு தெரிந்து கொள்ளக்கூட  முடியாமல் மின்வாரிய அலுவலகத்தின் வாயிலில் கூட்டம் குவிந்திருந்த நிலையில், என்ன ஆனாலும் சரி நாளை காலை ஆறுமணிக்கே வந்து மின்கட்டணம் செலுத்த முயலலாம் என்று பேசிக் கொண்டு கூட்டம் கலைந்தது. 

மின் கட்டணத்தைச் செலுத்த தமிழக அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் இயங்கலையை அச்சாரத் தொகை (அட்வான்ஸ் பெமெண்ட்) கூட கட்ட முடியாமல் முடக்கி வைத்திருக்கிறது மின்சார வாரியம். 

கொரோனாவைக் காரணம் காட்டி, மின் கணக்கெடுப்பிற்கு- பகுதிக்கு ஒருவர் வருவதை நிறுத்தி வைத்துவிட்டு, இன்றைக்கு ஒட்டுமொத்த மக்களையும் மின்வாரிய அலுவலகத்தில் குவிய வைத்திருக்கிறது அரசு. அப்புறம் எதற்கு கொரோனா பரவலைத் தடுக்கவென்று மக்கள் விலைகொடுப்பில் 100 நாட்களைத் தாண்டிய ஊரடங்கு? மக்கள்- மின்வாரிய அலைகழிப்பில், தமிழக அரசின் மீது கடுங்கோபத்தில் கண்டபடி திட்டியபடி மனஉளைச்சலின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.