31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. அவர் தயாரித்தது பெட்ரோல் இல்லையா? அவர் தயாரித்தது எரிபொருளே இல்லையா? மூலிகை பெட்ரோல் என்று அவர் அறிவித்தது தவறா? அவர் ஏதோ எரிபொருளை கண்டு பிடித்து விட்டிருந்தால் அதற்கான அங்கிகாரம் தருவதில் என்ன சிக்கல் என்பதற்கான கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விடை கிடைக்கவேயில்லை. ஆனால், பெட்ரோலில் கலப்படம் செய்து தனது கண்டுபிடிப்பை மூலிகை பெட்ரோல் என்று பெயர் மாற்றம் செய்து விற்பனையில் இறங்கியதாக் கூறி ராமர் பிள்ளை உள்பட 5 பேர் மீது எழும்பூர் நடுவண் அரசு குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்தது. அதோடு, மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மறுபடியும் மூலிகை பெட்ரோல் தயாரிக்கப்போவதாக அறிவித்த ராமர் பிள்ளை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை நாளன்று அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை நொளம்பூரில் ராமர் பிள்ளையை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமர் பிள்ளையின் மூலிகை எரிபொருள் குறித்த, தொடர் ஆர்வத்திற்கு காரணம் என்ன? இந்த முறையாவது உண்மை வெளிப்படுத்தப் படுமா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,881.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



