Show all

திமுகவில் குழப்பம்! உண்மையில் உள்ளே இருப்பது தானா, வெளியில் இருந்து கிளப்பப் படுவதா? தொடர்கின்றன விவாதங்கள்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் அடுத்த அமையப் போவது திமுக ஆட்சியே என்று அனைத்து தரப்புகளில் இருந்தும் செய்திகள், தகவல்கள், கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணமாய் இருக்கின்றன. அதன் பொருட்டு, அந்த வாய்ப்பை திமுக அறுவடை செய்ய திமுக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்புகளின் எச்சரிக்கை கூட.

இந்த நிலையில் திமுகவில் குழப்பம் விளைய வேண்டும் என்று அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிற நிலையில், பாஜக ஒருபடி மேலே சென்று அழகிரியை அந்த வகைக்கு பகடைக் காயாக பயன் படுத்துவதாக செய்திகள் வந்த வண்ணமாய் இருக்கின்றன. அது உண்மைதான் என்று மக்கள் நம்பும் வகையாக அழகிரி தரப்பும் ஏதாவது அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றன.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள தொண்டர்கள் தன் பக்கம்தான் உள்ளனர் என்று மு.க.அழகிரி கூறத் தொடங்கியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'துக்கம் தணியாத 6-வது நாளில் தூண்டிவிடப்பட்ட அம்புகள், வடக்கே இருந்து வந்த திட்டப்படி சில சத்தங்களை எழுப்பினால் சரித்திரம் மாறிவிடும் என்று நப்பாசை கொள்கின்றனர்' என்று அழகிரியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று தனது கீச்சு பக்கத்தில், 'காலம் காலமாக திமுகவிலும், அதிமுகவிலும், இலவச சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு பெரியார் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி: அரசியல்வாதியாக இன்னும் அறியப்படாதவர் துரை தயாநிதி. எதிர்காலத்தில் அவர் அரசியலில் ஈடுபட்டாலும் அவரது வளர்ச்சிக்கு இதுபோன்ற கருத்துகள் தடையாக இருக்கும்.

திமுகவின் உட்கட்சி பிரச்சினை என்பதைத் தாண்டி தாய்க் கழகம் என்ற உரிமையோடு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், துரை தயாநிதி பதிவிட்டுள்ள கருத்து கண்டிக்கத் தக்கது. தன்னை நல்ல அரசியல் வாதியாக நினைத்திருந்தால் அவதூறான கருத்தை பதிவிட்டிருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

திராவிடர் விடுதலைக் கழகம் என்றொரு மற்றொரு அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி: மதவாத சக்திகள் தமிழகத்துக்குள் நுழைய தடையாக இருப்பது திமுக போன்ற கட்சிகள்தான். அப்படி இருக்கும்போது, அழகிரி மூலம் அவர்கள் நுழைய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலையில்தான், கி.வீரமணி தனது பொதுநல கருத்தை தெரிவித்தார்.

ஆனால், தங்கள் சுயநலத்துக் காக துரை தயாநிதி கருத்தை பதிவிட்டது கண்டிக்கத்தக்கது. மூத்த தலைவரான வீரமணியை பொதுவெளியில் அவதூறாக விமர்சிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,881.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.