Show all

மனிதர்களைக் கொத்து கொத்தாக கொன்றொழிக்கும், மதம் பிடித்த மதங்களின் தேவை என்ன? சீமான் கேள்வி

நியுசிலாந்தில் தாக்குதல் ஏன்? அதற்கு பதிலடி தாக்குதல் இலங்கையில் ஏன்? மதங்களுக்கு, மதவன்முறைகளுக்கு  எதிரான ஆர்ப்பாட்டத்தை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம்தமிழர் கட்சி முன்னெடுத்தது.

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில்  நிகழ்த்தப் பட்ட, முஸ்லீம் தீவிரவாதிகளின் மனிதநேயமற்ற குண்டு வெடிப்பைக் கண்டித்து, நாம்தமிழர் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு போன்ற அழிவுப் பாதைக்கு தமிழகத்தை எடுத்துச் செல்லும் வகையாக நிகழும் சாதி, மத மோதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில், நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. மதங்கள் தான் நம்மை பிளவுப்படுத்துகிறது. மதம் மனித உறவுக்கு தானே தவிர உயிருக்கு அல்ல. இலங்கையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் ராஜபக்சேவுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டையும் சீமான் முன்வைத்தார்.
சாதி மதங்களால் தமிழ் சமுதாயம் மிகப்பெரிய வீழ்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. மதவாதத்தை பற்றி பேச தி.மு.க அ.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளுக்கு எந்த தகுதியும் இல்லை. 50 ஆண்டு கால திராவிட ஆட்சியை ஒரு நாள் கிழித்து குப்பையில் போடமல் விடப் போவதில்லை என்று சீமான் ஆவேசமாக பேசினார்.
உலகில் நடந்த போர்களைப் பட்டியல் இட்டால், மன்னர்களின் வல்லாதிக்கத்தை நிறுவ நடந்த தொடக்ககால போர்களைத் தவிர்த்து- 
இரண்டு உலகப் போர்கள், சிலுவைப் போர்கள், முஸ்லீம் போர்கள், உலகம் முழுவதும் வெள்ளையர்கள் நிகழ்த்திய போர்கள் அனைத்தும் மதங்களின் வல்லாதிக்கத்தை நிறுவ நிகழ்த்தப் பட்டவையே. 
நேருக்கு நேராக நின்று நிகழ்த்தப் படுகிற போர்களைத் தாண்டியும், அதிரடி தாக்குதல், தற்கொலை தாக்குதல், புவியில் நடத்தப் பட்ட தாக்குதலுக்கு- செவ்வாயில் தாக்குதல் என்று விஞ்ஞானப் புனைக்கதைகள் போன்று, உலகாளவிய எதிர்பாராத தாக்குதல், அதிரடித் தாக்குதல் என்று செரிமானம் செய்து கொள்ள முடியாத தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன மதங்கள்.  
தமிழர் மண்ணான இந்தியாவிலும், இலங்கையிலும், தமிழர்தம் பண்பாட்டு நெறிகளால், இவ்வாறான போர்கள் தவிர்க்கப் பட்டு வந்த நிலையில், இலங்கையில்  தமிழர் மீதான இனஅழிப்பு போர் நிகழ்த்தி, தமிழர்களை அழித்துவிட்டு தற்போது இந்த வகை மதப்போருக்கு இலங்கையைக் களமாக்கியிருக்கிறது இலங்கையில் சிங்கள பேரினவாதம்.
இந்தியாவில் பெரும்பான்மை தமிழர் இறைநெறிகளை உள்ளடக்கிய (மதங்கள் அல்லாத) சிவனிய, மாலிய சமயங்களை ஒன்றித்து ஹிந்துத்துவா என்ற புதிய மதமாக கட்டமைத்து, உலக மதவாதிக்க அசிங்கங்களோடு இந்தியாவை இணைத்து விட இந்தியாவில் பாஜக- பாஜக ஆதரவு சக்திகளோடு களம் கண்டு வருகிறது. 
மதங்களிடமிருந்து இந்தியாவைப் பாதுகாத்து வருகிற தமிழர் நெறிகளை புறந்தள்ளுவதற்காக, தமிழ்இனவழிப்பு, தமிழ்மொழியழிப்பு வேலைகளில் பாஜக களப்பணி ஆற்றிவருகிறது. தமிழர்கள் விழிப்புடன் இருப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,135.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.