Show all

என்ன செய்யப் போகிறோம் நாம்! கொரோனா தனிமைப்பாட்டால் இப்படி ஒரு விபரீதமா

கொரோனா தனிமைப்பாட்டால் நிகழ்ந்த ஒரு விபரீதம். தேனியில் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பி உள்ளது. 

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும்கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் நலங்குத் துறை அறிவுறுத்தி வருகிறது. 

முதன்மையாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எல்லாருமே விமானநிலையத்தில் சோதிக்கப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்டம் ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் துணி வணிகம் செய்கிறார். துணி வணிகத்திற்காக இலங்கை சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியிருந்தார். இலங்கையிலிருந்து வந்தவர் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

அவருக்கு நலங்குத்துறை, வருவாய்த்துறை, காவலர்கள் என எல்லாருமே தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர். அதன்படியே வீட்டிற்குள்ளேயே இளைஞர் முடங்கி கிடந்தார். இப்படி முடக்கி வைத்ததால் இளைஞர் மன உளைச்சலுக்கும் ஆளானார். திடீரென இவர் வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்தார். தனது உடைகளை மொத்தமாக களைந்துவிட்டு, பித்துபிடித்தவர் போல சாலையில் ஓடத்தொடங்கினார். அருகில் இருக்கும் பக்தசேவா என்ற தெருவிற்குள் ஓடிய இளைஞர், ஒரு வீட்டின் முன்பு படுத்திருந்த 90அகவை ஒரு பாட்டியின் கழுத்தை கடித்துவிட்டார். 

பாட்டி வலியால் கத்தி கூச்சலிட்டார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இளைஞரிடமிருந்து மூதாட்டியை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களையும் இளைஞர் கடிக்க முயன்றார். எனினும் அவரை மொத்த பேரும் சேர்ந்து மீட்டுவிட்டனர். படுகாயமடைந்த பாட்டியை உடனடியாக 108 சடுதிவண்டி மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இளைஞர் வேறு எங்கும் யாரையும் கடித்து வைத்து விடக்கூடாது என்பதால், அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்துவிட்டு காவல்துறையினருக்குத் தகவல் சொன்னார்கள் அப்பகுதி மக்கள். 

விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.

இதனிடையே தீவிர சிகிச்சையில் இருந்த பாட்டி இன்று காலை இறந்துவிட்டார். தனிமைப்படுத்தப்பட்டவர் ஆவேசம் அடைந்து கடித்தால், பாட்டி உயிரிழந்த நிகழ்வு தேனியில் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பி உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.