எச்.இராஜாவும், ஹிந்துத்வ அமைப்புகளும் செய்த விளம்பரத்தால் சிறுமுகையில் விற்பனை அதிகரித்துள்ளதாக காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார். 06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும், இந்திய கைத்தறி நெசவு பயிற்சியாளருமான காரப்பன், கோவையில் கடந்த சில கிழமைகளுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில் ஹிந்துக் கடவுள்கள் குறித்துப் பேசிய கருத்து நம்ம எச்.இராஜவை மிகவும் பாதித்ததாம். ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்துத்வ அமைப்புகள் காரப்பனுக்கு எதிராக சுவரொட்டி அடித்து ஊர்முழுக்க ஒட்டினர். காரப்பன் சில்க்ஸ் கடையில் ஹிந்துக்கள் யாரும் துணிவாங்க வேண்டாம் என்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டனர். இதையடுத்து, காரப்பன், ஹிந்துக்களை புண்படுத்திய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், பாஜக இந்தியச் செயலாளர் எச்.இராஜா, “சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த ஹிந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுக்க தீயாகப் பரவியது. பாஜகவினரின் கருத்துப் பரப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வெளியூர்களைச் சேர்ந்த பலரும் காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்துக்குச் சென்று துணிவாங்க வேண்டும் என தமது விருப்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பலரும், அங்கு சென்று தீபாவளிக்கு துணி வாங்கி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். கடை முதலாளியின் கருத்துக்காக கடையின் வணிகத்தைத் தடுத்து, பொருளாதார ரீதியாக முடக்க நினைத்த பாஜகவினரின் திட்டத்தை எதிர்த்து, பலரும் ஆதரவு தெரிவித்து வணிகத்தைப் பெருகச் செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த காரப்பன், “அறிமுகம் இல்லாதவர்கள் கூட எனக்கு ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சிறுமுகையில் உள்ள அனைத்துக் கடைகளிலுமே வணிகம் அதிகரித்துள்ளது. பட்டுப்புடவை தயாரிப்பில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்துக்குப் பிறகு சிறுமுகை முதல் இடத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,314.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



