Show all

ஊரடங்கை பரிந்துரைக்கவில்லை மருத்துவக்குழு! ஊரடங்கு மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தாது. நம்பிக்கைதரும் மாற்று யோசனைகள்

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தாது எனவும் தமிழக முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார். 

அந்த வகையில் நாளை செவ்வாய்க் கிழமை ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளோம். கடந்த 2 கிழமைகளைப் பார்க்கையில் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதனால் அங்கு பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும். சென்னையில் அன்றாடம் 10 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. சோதனைகள் அதிகரித்தால் தான் பாதிப்பு எண்ணிக்கை உயருகிறது. சோதனைகள் அதிகரிப்பதால் பாதித்தோரை வேகமாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த முடிகிறது. இதனால் மற்றவர்களுக்கு பரவுதலையும் தடுக்க முடிகிறது. 

இந்தியாவிலேயே அதிக சோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளன. மேலும், இறப்பு விகிதமும் இங்கு தான் குறைவாக உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல, அது மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தாது. அனைத்து மாவட்டங்களிலும் நீட்டிப்பு தேவையில்லை. பொது போக்குவரத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும் என பரிந்துரைத்தோம். ஏனெனில் பொது போக்குவரத்தால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களை விட 30 விழுக்காட்டு படுக்கை வசதி அதிகமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 80 விழுக்காட்டினருக்கு மேலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே உள்ளன. அதனால் அச்சம் வேண்டாம். சுவை, மணம் தெரியவில்லை எனில் காய்ச்சல் மையத்திற்கு சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். முகமூடி அணியாமல் வெளியே வராதீர்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கட்டாயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் யோசனைகளை சரியாக அரசு முன்னெடுக்குமேயானால் உறுதியாக தமிழகம் கொரோனா தாக்குதலை முறியடித்து வெல்லும் என்னும் நம்பிக்கை ஒளி தெரிகிறது. 

சோதனைகளை அதிகப்படுத்துங்கள். படுக்கைகளை அதிகப்படுத்துங்கள், பொதுப் போக்குவரத்து கொஞ்ச காலத்துக்கு வேண்டவே வேண்டாம். இப்போதைக்கு முகமூடியே கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து என்பதை தமிழக மக்கள் தெளிவாக உணரவேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.