தமிழகம் முழுவதும் நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை முழுமையான ஊரடங்கு. அதற்குப் பின்னர் ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அனுமதிக்கப்படும். 15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2,212 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. 37,331 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்படி, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள முழு ஊரடங்கு நாளது 21,ஆனி (ஜூலை 5) ஞாயிற்றுக் கிழமை முடிய தொடரும்
(!) அந்த ஞாயிற்றுக் கிழமையும் தொடரும் மேலும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளும் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்
(!) மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்
(!) மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து பதினைந்து நாட்கள் தற்காலிகமாக நிறுத்தம்
(!)கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் வணங்க அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
(!) மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் வழிபாடு அனுமதிக்கப்பட மாட்டாது.
(!) தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
(!) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
(!) அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
(!) வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து காட்சிக் கடைகள் மற்றும் பெரிய கடைகள் (நகை, துகில் போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
(!) தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
(!) டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.
(!) தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. கட்டாயத் தேவை இல்லாத பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், இயங்கலை வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
(!) வாடகை வண்டிகள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. தானிகள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மிதிவண்டிக் கூண்டும் அனுமதிக்கப்படுகிறது.
(!) மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
(!) நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
(!) மதம் சார்ந்த வழிபாடுகள், சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிப்பு
(!) சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் அனுமதிபெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்
(!) திருமணம், இறுதிசடங்குகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி
(!) பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தடை தொடரும் என்றும், இயங்கலைக் கல்விக்கு தடையில்லை என்றும், மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே மின்அனுமதிப் பயண நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



