09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிரவைத்துள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போர்க்கொடி தூக்க, அவர்களைக் கலைக்க மருத்துவமனை இருக்கும் பகுதி என்றுகூட பாராமல் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் காளியப்பன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குண்டு துளைத்து பலியாகியுள்ளார். இதற்கிடையே, காளியப்பனை சுட்டுக்கொன்ற பிறகு, காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் குறித்து நியூஸ்மினிட் செய்தியாளர் அனா ஐசக் என்பவர் பகிர்ந்துள்ள கணொளி வெளியாகியுள்ளது. அதில், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் காளியப்பன் கீழே சரிந்து இறந்துகிடக்க அவரைச் சுற்றி 10 முதல் 15 காவல்துறையினர் நிற்கின்றனர். அப்போது சிலர் அவன் 'நடிக்கிறான், நடிக்கிறான்' என்று கூற ஒருவர் அதற்கும் ஒருபடி மேலேபோய் தான் வைத்திருந்த லத்திக் கம்பால் காளியப்பனைத் தொட்டு, 'ஏய் ரொம்ப நடிக்காதே போ' என்று கூறுகிறார். காவல்துறையினரின் மனசாட்சியற்ற இந்தச் செயலுக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன. ஏற்கெனவே, நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 11 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியாகியிருப்பது தூத்துக்குடியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



