சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், குன்றத்தூரில் வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கும் விட்டுள்ளார். குறைவான ஓய்வூதியம், மற்றும் அந்த வாடகையை வைத்தே அவரது குடும்பம் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அஜித் அகவை 21, என்பவர் தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகையை அஜித் குடும்பத்தினர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்றிரவு அஜித்தின் பெற்றோரிடம் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அஜித், குணசேகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனைக் குத்தியுள்ளார். குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார். அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி குணசேகரனை கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் காவல்துறையினர் குணசேகரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த அஜித்தை கைது செய்தனர். விசாரணை ஓடிக்கொண்டிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



