தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போகிறதாம். உறுதியாக இது அரசுக்கு மிகப்பெரிய அறைகூவலே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயங்கலை வகுப்புகளுக்கு ஒப்படைக்கலாமே. 25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தங்கள் வருமானத்திற்கு சேதாரம் வந்து விடாத வகைக்கு, தனியார் பள்ளிகள் இயங்லை வகுப்பு என்கிற உபாயத்தைக் கையில் எடுத்துள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளோடு பெரும் போட்டியை சமாளித்து வருவதே தற்போதைய நிலைமையாகும். தனியார் பள்ளி மாணவர்கள் இயங்கலை மூலமாக கல்வி பெறுகிற நிலையில், தனியார் பள்ளிகளோடு அரசு பள்ளி மாணவர்களின் சமாளிப்புக்கு பெரிய அறைகூவல் காத்திருக்கிறது. இதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒத்துழைக்கும் வகையாகத் தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளிகளிலும் வரும் திங்கட் கிழமை முதல் இயங்கலை வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். அரசின் இந்த இயங்கலை வகுப்புகள் முயற்சி பாராட்டுக்குரியதாகவே இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியமானது? என்கிற ஐயப்பாடுகளை எழுப்புகின்றன பல கேள்விகள். மாணவர்களைக் கொரோனாவிலிருந்து பாதுகாக்க, நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் இருந்தே கொரோனாவை எதிர்கொண்டிருக்கிறோம். இதனால் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் பெரும் சிக்கலுக்குரியதாகின. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆனாலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்குதல், ஆண்டு கட்டணம் செலுத்துதல் என செயல்பாடுகள் தொடருகின்றன. அத்துடன் இயங்கலை வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இணைய வழிக் கல்வியைத் தனியார் பள்ளிகள் 2 வகைகளாக நடத்துகின்றன. ஒன்று இயங்கலையாக வகுப்புகளை நடத்துதல், மற்றொன்று காணொளிகளைக் குறிப்பிட்ட இணையத்தளத்தில் பதிவு செய்தல். இந்த இரண்டாவது வகை செயல்பாடுகளுக்காக புலனம், டெலிகிராம் குழுக்களைப் பள்ளிகள் உருவாக்க பெற்றொருக்கு அறிவுறுத்தல்கள் தருகின்றன. ஆனால் இணையத்தையும் செல்பேசியையும் மட்டுமே சார்ந்த இந்த கல்விமுறை என்பது 100விழுக்காடு பெருநகரங்களுக்கு மட்டும்தான் சாத்தியமானது. திண்டுக்கல் போன்ற 2-ம் நிலை நகரங்களில் கூட இது 100விழுக்காடு சாத்தியம் என்று கூறிவிட முடியாது. இயங்கலை வகுப்புகளால் ஆண்ட்ராய்டு மிடுக்குப்பேசி, தடையற்ற இணைய இணைப்புக்கு பெற்றோர் செலவிட்டாக வேண்டிய நெருக்கடி உருவாகிறது. கிராமப்புற பெற்றோர் நகரங்கள், 2-ம் நிலை அல்லது சிறுநகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள் ஓரளவு இதனை சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமப்புறங்களில் அதுவும் இன்னமும் செல்பேசி சைகையே சரியாக கிடைக்காத கிராமங்களில் உள்ள மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது பெரும் கேள்வி. அனைத்து கிராமங்களிலும் அனைத்து செல்பேசிகளுக்கும் சைகை கிடைக்கிறது என்றெல்லாம் சொல்லவே முடியாது என்பதுதான் உண்மை. இப்படியான சிக்கல் இருக்கும் போது கிராமப்புற மாணவர்களை மட்டுமே கொண்ட அரசு பள்ளிகளிலும் திங்கட் கிழமை முதல் இயங்கலை வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. கிராமப்புறங்களில் ஆண்ட்ராய்டு மிடுக்குப்பேசி வைத்திருக்கும் பெற்றோர் எண்ணிக்கை நிச்சயம் குறைவுதான். அப்படியே இருந்தாலும் இயங்கலை வகுப்புகளுக்கான தரவுக்கு எவ்வளவுதான் அவர்களால் செலவிட முடியும்? அதுவும் ஊரடங்கு காலத்தில் இது எந்த அளவு சாத்தியமானது? வழக்கமாக வரும் பேசி அழைப்புகளுக்கே மொட்டை மாடியிலும் சாலையிலும் நின்றுதான் கிராமங்களில் இருந்து பதில் பேச வேண்டிய நிலையில் பல ஆண்டுகளாக சைகைக் குறைபாடு இருக்கிறது. கிராமப்புற நிலைமை இப்படி இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கான இயங்கலை வகுப்புகள் எந்த அளவுக்கு சாத்தியமாகிறது? முதலில் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்துவதற்கான இணைய இணைப்பு, தரவுத் தேவை என்பவற்றுக்கே பெரும் சிக்கல் இருக்கிறது. ஆகையால் இத்தகைய அம்சங்களை கணக்கில் கொண்டுதான் இயங்கலை வகுப்புகள் குறித்து அரசு நல்லமுறையிலான முடிவெடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோள். இந்த நிலையில்தாம் நமக்குத் தோன்றுகிற யோசனை: இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணைய வழிக்கல்வி வகுப்புகளுக்கு ஒப்படைக்கலாமே என்பதாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



