வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுக, இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. தேர்தலுக்கு இரு நாள்களுக்கு முன் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் என்று காரணம் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (05.08.2019) அன்று நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு பதிகை நேற்று வரை நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, திமுக சார்பில் டி.எம். கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் வேட்புமனுத் பதிகை செய்துள்ளனர். கடந்த முறை அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துவிட்டார். ஆனால், மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ. அருணாச்சலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் தற்போது நாம் தமிழர் கட்சி, திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,217.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.