நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணத்தை அடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அனிதா உயிரிழப்புக்குக் காரணமான நடுவண், மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று காவல்துறை அனுமதியுடன் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே திருச்சி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அருண் அரசியல் தலைவர்கள் தங்கியிருந்த சங்கம் உணவகத்திற்கே சென்று கூறினார். இதனால், பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சங்கம் உணவகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ‘பொதுக் கூட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. எனவே, பொதுக்கூட்டம் நடைபெறும்’ என்று கூறினார். பொதுக் கூட்டம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடந்தேறியது. நடுவண் பாஜக அரசு, தமிழக அதிமுக அரசை எந்த நிலையிலும் காப்பாற்ற முனைகிறது. அதிமுக பெரும்பான்மை இழந்து விட்ட நிலையில் திமுக எதிர்கட்சிகளுடன் அதிமுக ஆட்சியை கவிழ்க்கத் தயாராகி விட்டது என அறிந்து திமுகவை நெருக்குவதற்காக அவசர அவசரமாக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது. இனி தமிழக எதிர்காலத்தை திமுகவின் நகர்த்தல்களே தீர்மானிக்கப் போகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



