அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தினால் கடந்த 1 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் யாருடைய தூண்டுதல் பேரிலோ மனு பதிகை செய்துள்ளார். 1.அந்த மனுவில், தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், 2.அரசியல் கட்சியினர் உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்கவும் 3.நடுவண் அரசு பாடத்திட்டத்தை மாநிலப் பாடத்திட்டத்தில் மாற்றியமைக்க உத்தரவிடவும் 4.அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர் தலைமையில் அறஞ்சார் விசாரணை நடத்த உத்தரவிடவும் 5.அனிதா மரணம் தொடர்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கவும் வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை, மிக மிக அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. கடையடைப்பு, போராட்டம், சாலை மறியல் நடத்துவது அறங்கூற்றுமன்ற அவமதிப்பாகும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு இதனைக் கையாள வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை செப்டம்பர் 15 க்கு ஒத்தி வைத்தனர். நடுவண் அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டது. நடுவண் அரசு இன்று வரை அந்தத் தீர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. காவிரியில் தண்ணீர் விட உச்ச அறங்கூற்று மன்றம் கருநாடகத்திற்கு எத்தனையோ முறை உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புகளை கருநாடக அரசும் ஒரு பொருட்டாகவே மதிக்கவேயில்லை. வேறுவழியில்லாமல் உச்ச அறங்கூற்று மன்றமே- தமிழக அரசைப் பார்த்து- நீங்கள் ஏன் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள வில்லை? என்று கேட்டு தனது தீர்ப்பின் போக்கை மாற்றிக் கொண்டு விட்டது. அந்த வகையாக தமிழகமும் உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பை புறக்கணிக்க முன்னுதாரணம் இருக்கிறது என்றே நம்பலாம், ஏனென்றால் நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் தாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உச்ச அறங்கூற்று மன்றம் தாம் மக்கள் அவமதிப்பு தீர்ப்புகளை சொல்வதை நிறுத்திக் கொண்டாக வேண்டும். என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அதனால், பாலியல் பாஜக துறவி அறங்கூற்றுமன்றத்தால் தண்டனை பெற்றதை எதிர்த்து ஐந்து மாநிலங்களில் அரங்கேற்றப் பட்;ட அருவருப்பான வன்முறை போலல்லாமல்- தமிழக மாணவர்கள், பொதுமக்கள் அறப் போராட்டம் தொடரவே செய்யும். நாளை நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரனும், செப்டம்பர் 12 அன்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவும் போராட்டம் அறிவித்துள்ளனர். அவை நடக்குமா என்று தெரியவில்லை. அதேபோல நீட் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இந்த போராட்டம் தடையை மீறி நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



