ஆதாரம் தர ஆயத்தமாக இருப்பதாக அறங்கூற்றமன்றத்தில் பொன். மாணிக்கவேல் பதிவு செய்த அதிர்ச்சியான செய்தி: சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கிறதாம். 09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணைக் கண்காணிப்பாளர் காதர் பாஷா சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார். இந்த மனு அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்ககோரி பொன். மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அப்போது, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டார் அறங்கூற்றுவர், பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், பொன். மாணிக்கவேல் தரப்பில் அணியமான வழக்கறிஞர், சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து உரிய ஆதாரங்களுடன் பதில் மனு பதிகை செய்ய பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட அறங்கூற்றுவர், விசாரணையை இரண்டு கிழமைகளுக்கு ஒத்திவைத்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,224.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



