Show all

குவியும் வடமாநிலத்தவர்! தனியார் துறையில் 95விழுக்காடு வேலையை தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்றுங்கள். வேல்முருகன் காட்டம்.

ஜெகன்மோகனைப் பின்பற்றி, தனியார் துறையில் 95 விழுக்காடு வேலையை தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விடுக்கும் வேண்டுகோள்:

தனியார் துறையில் 95 விழுக்காடு வேலையை தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருப்பதாவது: ‘வேலைவாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை என்பது அரசமைப்புச் சட்டப்படியான உரிமை. சமூக நீதிதான் இதன் இலக்கு. அதாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்; அரசுத் துறையில் மட்டுமின்றி தனியார் துறையிலும் இது எட்டப்பட வேண்டும். இதற்காக தொடர்ந்து போராடி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இது தொடர்பாக உரிய சட்டம் இயற்றவும் தமிழக அரசை வலியுறுத்திவருகிறது.’ 

தமிழக அரசுத்துறைப் பணிகள் 100 விழுக்காடு தமிழக மக்களுக்கே, தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு சார்ந்த பணிகளில் 95 விழுக்காடு தமிழக மக்களுக்கே என்று சட்டத்தை முறைப்படுத்துங்கள் அண்மைக் காலமாக, வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது. நாள்தோறும் அலை அலையாக வந்து குவிகிறார்கள். எல்லோருமே இளைஞர்கள். அத்துக்கூலிக்கு முறைசாராத் துறைப் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தற்போது இவர்களின் எண்ணிக்கை 1.25 கோடியைத் தொடும். இந்த வெளிமாநில மக்களை முறைப்படுத்தவும் சட்டம் இயற்றக் கோரி வருகிறோம். 

தொடர்வண்டித்துறை, வங்கிகள், அஞ்சலகங்கள், பாதுகாப்புத்துறை தொழிலகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை பணிகளில் வடமாநிலத்தவர் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறார்கள். இதனால் இங்கெல்லாம் தமிழர்களின் எண்ணிக்கை படுபயங்கரமாகக் குறைந்துவிட்டது. 

தனியார் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பதல்லாமல், இனம் மற்றும் சாதி பார்த்தே நியமனங்கள். எனவே அங்கும் தமிழர்களுக்கு இடமில்லை. இந்த நிலையில்தான் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அரசு, புரட்சிகரமான சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது; நாட்டிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு உறுதி செய்யும் சட்டம். 

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு-தனியார் கூட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அதாவது 75 விழுக்காடு வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கே என்ற மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

சாக்குப்போக்குகளைச் சொல்லி வேலைவாய்ப்பை மறுத்துவிடக் கூடாது என்று நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடியே போடுகிறது மசோதா. அதன்படி, உள்ளூர் பணியாளர்களுக்குத் தகுதி மற்றும் திறமை இல்லை என்று கூறி அவர்களைத் தட்டிக்கழித்துவிட்டு வெளியாட்களை பணிக்கு எடுக்கக் கூடாது; மாறாக, திறனற்றவர்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் திறன் பயிற்சி அளித்து பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

ஆனால் ஆந்திராவை விடவும் தமிழ்நாட்டுக்குத்தான் இந்தச் சட்டம் கூடுதல் தேவையாக உள்ளது. அந்த அளவுக்கு இங்கு நிலைமை கெட்டுப்போயுள்ளது. அண்மையில் ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை அறிவித்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக, ‘வெளிமாநிலங்களில் போய் வேலை செய்யும் தொழிலாளர்கள், இந்தியாவுக்குள் எந்த மாநிலத்திலும் இந்த ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம்’ என்றார் உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான். 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வெளிமாநிலத்தவர் அதிகம் என்பதைத் தெரிந்துதான் இப்படிச் சொன்னார் அவர். தமிழ்நாட்டில் போடும் சட்டம், 75 விழுக்காடு அல்ல, 95 விழுக்காடு வேலைவாய்ப்பை மண்ணின் மக்களுக்கு உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும்; அந்த அளவுக்குத் தமிழகத்தின் மீது மோடிக்கு வன்மம் இருக்கிறது. எனவே தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது: நம் மண்ணையும் மக்களையும் அழிக்கத் துடிக்கும் மோடியைக் கழித்துக்கட்டுங்கள்! தனியார் துறைப் பணிகளும் மண்ணின் மக்களுக்கே என்று உறுதி செய்யும் ஜெகன்மோகனைப் பின்பற்றுங்கள்’ இவ்வாறு கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,223.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.