Show all

எதிரும் புதிரும், அப்பாவும் மகனும், சந்திரசேகரும் விஜய்யும்!

விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். விஜய்யின் கொண்டாடியாக நான் இந்த அரசியல் கட்சியை எனது தனிப்பட்ட முயற்சியில் பதிவுசெய்துள்ளேன் என்று விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். 

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் கட்சியை பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி. விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். விஜய்யின் கொண்டாடியாக தான் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்- என் அப்பா கட்சிதானே என்று யாரும் சேராதீர்கள். அது என் கட்சி அல்ல என்று தன் கொண்டாடிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

எனது கொண்டாடிகள் எனது தந்தை கட்சி தொடங்கியுள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றும், தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்:-
இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.  அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது கொண்டாடிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.  மேலும் எனது கொண்டாடிகள் எனது தந்தை கட்சி தொடங்கியுள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் முன்னெடுப்புகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.