Show all

கொரோனா இலக்கியங்கள் படைப்போம், தீர்வுக்கான காப்பியம் கட்டமைப்போம்! பழந்தமிழ் முன்னோர் வகுத்தளித்த நெறியில்

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறது. நாமும் பேசுவோம் நிறைய பேசுவோம். கொரோனா இலக்கியங்கள் படைப்போம், தீர்வுக்கான காப்பியம் கட்டமைப்போம்! பழந்தமிழ் முன்னோர் வகுத்தளித்த நெறியில்.

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பழந்தமிழர் நெறிகள் வேதங்கள் வழங்கியவைகள் அல்ல. வேதம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. தமிழர்களுக்கு வேதம் கிடையாது. வேதவழி நடப்பது உலகினர் மரபு. வேதம் என்பது தனிமனிதன் அறிவில் உருவாகி, சமுதாயம் அதை பின்பற்றி நடப்பதற்கான நெறி. அந்தவகையில் ஒரு தனிமனிதனை கொண்டாடுவது தமிழர் நெறியன்று. 

தமிழர் ஒவ்வொருவரும் தாம் அறிவாளி என்று கருதும் தனியான குணத்தினர். அப்படி அவர்கள் கருதுவதை பொதுவெளியில் பரப்புவர். அதற்கு திண்ணைகள் (திண்ணைப் பேச்சு) சுமைதாங்கிகள் (பணியின் போது தலைச்சுமையை இறக்கி வைத்து விட்டு ஓய்வு கொள்வதற்காக சலையோரம் அமைக்கப்பட்ட கல் திட்டை) தர்க்க மேடைகள் (தான் அறிந்த செய்தியை பொதுவெளியில் அறிவித்து அது சரிதான் என்று நிறுவ ஊர்மக்களை கூட்டி போட்டியாளரை எதிர் கொள்ளுதல்) கலைவெளிகள் (ஒரு சிக்கலை காவியமாக்கி முத்தமிழ் வாயிலாக அரங்கேற்றுதல்) தமிழ்ச்சங்கம் (மன்னரின் அரசவையில் புலவர்களின் சங்கவையைக் கூட்டி மேலே பேசப்பட்ட மக்கள் படைத்த இலக்கியம் வகையாக, சரியென்று நிறுவிய நெறிகளை காப்பியமாக கட்டமைத்தல்.) இலக்கியம் என்பன- அவரவர்களுக்கு தோன்றிய விதிகளை சமுதாயத்தில் செய்தியாக வைப்பது. பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பன இலக்கியங்கள். 

காப்பியம் என்பது- அரசவையில் சங்கவைப் புலவர்கள் கூடி ஒவ்வொன்றுக்கும் தெளிவான அனுபவப்பட்ட நெறிகளை தொகுப்பது. தொல்காப்பியம் பழந்தமிழ் காப்பியம். பிற்காலத்தில் மொழி நெறிகளை தனியாக இலக்கணம் என்றும் வாழ்க்கை நெறிகளை சட்டம், மதம் என்றும் பேசுகிறோம். 

தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாக குடும்பத்தில் மொழிக்கும் வாழ்க்கைக்குமான காப்பிய நெறியை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். சமுதாய அடிப்படையில் அயலவர்களும் தமிழர்களோடு கலந்து விட்டதாலும், பெரும்பாலும் அயலவர்களே தமிழர்களை ஆளுவதாலும், உலகளவில் தமிழன் எந்த மூலையிலும் (தமிழீழம்) தன்னுடைய மொழிக்கும் வாழ்க்கைக்குமான காப்பிய நெறியை சமுதாய நெறியாகவும், சட்டமாகவும், தங்களுக்கான மண்ணாகவும் கொண்டாடி விடக்கூடாது என்பதில் உலகமதங்களும், மார்க்சியமும் கூட கூடி நின்று வீழ்த்தியே வருகின்றன.

இன்று உலகினரோடு தமிழர்களுமாக கொரோனா என்ற கொடிய நுண்ணுயிரித் தொற்றுக்கு இலக்காகியிருக்கிறோம். கொரோனாவிற்கு எதிரான காப்பியத்தீர்வு (மருந்து, மருத்துவம், சிகிச்சை) காண நிறைய இலக்கியம் படைப்போம். 

ஆம் கொரோனா பற்றியே பேசுவோம், எழுதுவோம், அனுபவங்களைப் பகிர்வோம், கொரோனா பாதிப்புள்ளவர்கள் மற்றவர்களுக்குத் தொற்றாமல் தனது அனுபவத்தை பொது வெளியில் விரித்துரைப்போம். பல்வேறு மருத்துவ முறைகளை அலசுவோம். ஒற்றை மனிதன் சொன்ன வேதமே தீர்வு என்பது, நீட் தேர்வு வைத்து தகுதிபார்ப்பது என்பனவெல்லாம் தமிழர் நெறியன்று. ஒருவர் தன் நோயை வெளியில் சொன்னால் விலகியோடுவது தமிழர் நெறியன்று- பத்து போர்களும் பத்து வகையான சிகிச்சை அனுபவங்களை பகிர்ந்து நோயாளியைக் குணப்படுத்துவதுதாம் தமிழர் நெறி. பாதுகாப்புக்கு கருவிகள் தேடுவோம். சமூகவலை தளங்களில் எழுதுவோம். தெரிந்ததெல்லாம் எழுதுவோம். புரிந்ததெல்லாம் எழுதுவோம். உண்மையை எழுதுவோம். சாத்தியப்படாது என்கிற நம்பிக்கைகளைத் தகர்ப்போம். கொரோனாவுக்கு மருந்து எந்த எளிய மனிதனிடம் இருந்தும் வரலாம்.  எல்லோரும் பேசுவோம் எல்லா இடங்களிலும் பேசுவோம். கொரோனா இலக்கியங்கள் படைப்போம், தீர்வுக்கான காப்பியம் கட்டமைப்போம்! பழந்தமிழ் முன்னோர் வகுத்தளித்த நெறியில்.

அண்மைச் செய்தி:- கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அம்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கு அது மீண்டும் ஏற்படாது. இதேபோல், ஒருவரின் உடலில் கொரோனா நுண்ணுயிரி தொற்றும்போது, அதற்கு எதிரான தனிச் சிறப்பான நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன.

அந்த செல்கள் நோய் தொற்றிய நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்தில் கலந்துவிடுகின்றன. பின்னர் அவை கொரோனா நுண்ணுயிரியை அழிக்கும் வல்லமையைப் பெறுகின்றன. அத்தகைய நோய் எதிர்ப்பு செல்கள் உள்ள பிளாஸ்மாவை கொரோனா நோயிலிருந்து மீண்டவரின் ரத்தத்தை தானமாக பெற்று அதிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.

அந்த பிளாஸ்மாவை, கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுக்கும்போது, அவரது உடலில் கொரோனா நுண்ணுயிரி அழிந்து குணம் பெறுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உதவியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்பு கபசுரக் குடி நிரைப் பற்றி பேசினோம். தமிழ்மக்கள் நுண்ணுயிரிக் கொல்லியாக மஞ்சளைப் பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனா எதிர்ப்பு ஆற்றலுக்காக அன்றாடம் ஒருபல் பூண்டை தின்று வருகிறார்கள். 

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு தமிழ்க் குடும்பங்கள் சளியின் தொடக்கநிலைக் குழப்பம் (பிரைமரிகாம்ளக்ஸ்) என்னும் நோய் வாழ்க்;கை முழுவதுமே வராத  வகைக்காக கத்தூரி கோரோசனை மாத்திரைகளைக் கொடுத்து வந்தனர் என்ற செய்தி இணையத்தில் பகிரப்பட்டது. பல பெரியவர்கள் ஆம் என்று ஒப்புதல் தெரிவித்தனர்.

பேசுவோம், எழுதுவோம், எல்லா இடங்களிலும் கொரோனா பற்றியே. ஆய்வாளர்களுக்கு ஏதோ ஒரு பேச்சு தூண்டலாக அமைந்து கொரோனாவிற்கு எதிரான மருந்து, மருத்துவம், சிகிச்சை கிடைக்கட்டும். கொரோனா இலக்கியங்கள் படைப்போம், தீர்வுக்கான காப்பியம் கட்டமைப்போம்! பழந்தமிழ் முன்னோர் வகுத்தளித்த நெறியில்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.