Show all

கொரோனாவைக் குணப்படுத்த, ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கும் தமிழகம்! பிளாஸ்மா சிகிச்சை எனும் பழைய பாணியில்

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதி கோர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இநத அனுமதியை கேரளாவும் கோரிய நிலையில் அனுமதி பெற்றுவிட்டதாக அறிய முடிகின்றது.

அம்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கு அது மீண்டும் ஏற்படாது. இதேபோல், ஒருவரின் உடலில் கொரோனா நுண்ணுயிரி தொற்றும்போது, அதற்கு எதிரான தனிச் சிறப்பான நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன.

அந்த செல்கள் நோய் தொற்றிய நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்தில் கலந்துவிடுகின்றன. பின்னர் அவை கொரோனா நுண்ணுயிரியை அழிக்கும் வல்லமையைப் பெறுகின்றன. அத்தகைய நோய் எதிர்ப்பு செல்கள் உள்ள பிளாஸ்மாவை கொரோனா நோயிலிருந்து மீண்டவரின் ரத்தத்தை தானமாக பெற்று அதிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.

அந்த பிளாஸ்மாவை, கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுக்கும்போது, அவரது உடலில் கொரோனா நுண்ணுயிரி அழிந்து குணம் பெறுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உதவியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சை முறைக்கான சோதனை வெற்றிகரமாக அமைந்தால், சிகிச்சைக்கான செலவு குறையும் என்று அப்போலோ மருத்துவமனை மருத்துவர் ராம்கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.