01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தந்தை பெரியார், அவர் வாழ்ந்த காலத்தில், தமிழ்ச்சமுகத்தில் ஆரியர்களால் புரையோடி விட்ட, மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என 'சுயமரியாதை இயக்கம்' தொடங்கினார். அதே அண்டு 'குடியரசு நாளிதழை' தொடங்கினார்;. இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்;கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது அகவையில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. தந்தை பெரியார் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார். தந்தை பெரியார் தொடக்க காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார். கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் 'வைக்கம் வீரர்' என அழைக்கப்பட்டார். இந்திய விடுதலைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் ஹிந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதான் இந்தியாவின் முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டமாகும். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த பெரியார் அவர்கள் விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் நீதிக்கட்சி என்ற பெயரை இந்தியா விடுதலை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திராவிட கழகம் என பெயர் மாற்றினார் பெரியார். திராவிடர் கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். ஹிந்து மதக் கடவுள்கள் மூலம் மூடநம்பிக்கைகளை மக்களிடையே வளர்ப்பதாக கூறி, இந்தியா விடுதலை பெற்ற ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், ஹிந்து மதக் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார். இந்தியா விடுதலை பெற்ற இருபத்தியாறு ஆண்டுகளுக்கு பின்பு இந்திய கல்வி அமைச்சர் திரிகுனா சென் அவர்களால், தந்தை பெரியாருக்கு 'யுனஸ்கோ விருது' வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பெரியாரின் மீது ஒரு அச்சம் இருந்தது. இன்று பெரியார் பிறந்த நாளில் அதை நமக்கான பெருமிதமாக கொண்டாடுவோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,913.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



