Show all

2ம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14வகை மளிகைப்பொருள் வழங்கலை, இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் வகைக்கான திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்

கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2-ம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வகையிலும், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து எறியும் வகையிலும் வருகிற திங்கட் கிழமை வரையிலும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையே குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த மாதம் முதல் குடும்ப அட்டைகளுக்குப் பயன்பாடு வழங்கப்பட்டு வருகிறது. 98.4 விழுக்காட்டு குடும்பங்கள் முதல் தவணை நிவாரண உதவித்தொகையை பெற்றுள்ளனர். முதல் தவணை நிவாரண உதவி பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கொரோனா பாதிப்பு நிவாரண நிதி உதவியாக 2-வது தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம், கொரோனா பாதிப்பு நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதேபோல, தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூசையுடன் இயங்கும் 12 ஆயிரத்து 959 கோவில்களில் மாதச்சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், கொரோனாவால் இறந்த இதழியலாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர், காவல்துறையினர்  மற்றும் அறங்கூற்றுவர்கள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ஆகிய உதவி வழங்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்பட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.