Show all

வியாழன் மற்றும் சனி கோள்களை நேரில் பார்க்க ஆசையா! அதற்கு இன்று அரிய வாய்ப்பு

குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நம் தமிழ் முன்னோர்கள் நெடுங்காலமாக ஒரே மண்ணில் வாழ்ந்த காரணம் பற்றி அவர்களால்; வானில் விளையும் தொடர் நிகழ்வுகளை கண்டு பதிவு செய்ய முடிந்திருந்தது. அதன் விளைவாய் அவர்களால்,
செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே யனைத்தும்
அறிவறி வாகாச் செறிவினை யாகிக்
களிறுகவு ளடுத்த வெறிகற் போல
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே. 

என்று புறநானூற்றில் வியத்தக்க வானியல் செய்திகளை யெல்லாம் எழுத முடிந்திருந்தது. 

கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நாம் இவ்வகையாக வெல்லாம் முயலவில்லை. என்பது நாம் நினைத்துப்பார்த்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சிறப்புச் செய்திக்கானது. 

நடப்பில் இன்று வானில் மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாமாம்.

இதுதொடர்பாக சென்னை கோளரங்க இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:- புவி மாதிரியான கோள் என்று கருதப்படும் செவ்வாய்க்கோள், கடந்த 15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5120 செவ்வாய்க் கிழமை (31.07.2018) புவிக்கு மிக அருகில் வந்தது. அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று (திங்கட்கிழமை) பூமிக்கு அருகில் வருகின்றன. வாயு பெருங்கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. 

குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.

சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் என்றாலும், இதேபோன்று ஒன்றாக காட்சியளித்தது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. தற்போதைய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.

இதற்கு முன்பு நாளது 06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122 அன்று (28.05.2000) அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை இன்று நாம் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.