இன்று ஒரே நாளில் 716 பேர்களுக்கு கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா வேகமாகப் பரவுகிறதோ என்று நாம் மலைப்பதற்கானதல்ல. மாறாக சோதனைக் கருவிகளையும், சோதனைகளையும், உரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் எல்லையில்லாமல் உயர்த்தியாக வேண்டும் என்கிற படிப்பினைகளுக்கானது. உண்மையில் நாம் இவைகளைக் குறைவாக வைத்துக் கொண்டு கொரோனா பாதிப்பாளர்களை கூட்டம் சேர்க்கிறோம் என்று பொருள். 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்று ஒரே நாளில் 716 பேர்களுக்கு கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பொறுத்த வரை, இது இன்றைய பாதிப்பு என்று கொள்ள முடியாது. கொரோனா பாதித்தவர்கள் அறிகுறியில்லமால் மற்றவர்களுக்கு பரப்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சோதனை மேற்கொள்வது ஒருநாள்; அவருக்கு கொரோனா இருக்கிறதுதானா என்று தெரிய வருவதற்கு ஒன்றிரண்டு நாட்கள். இப்படி புரியாத புதிராக மக்களையும், மருத்துவத்துறையினரையும், ஆட்சியாளர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிற நோய்தாம் கொரோனா. இதனால்தான் இன்றைக்கு கொஞ்சம் கூடுதலாக கொரோனா பாதிப்பாளர் எண்ணிக்கை வந்தால், உடனே கோபம் கொப்பளித்து சீனாவைத் திட்டத் தொடங்கி விடுகிறார் டிரம்ப். குணமளிப்பும் அப்படித்தான். அதிலும், நீடிக்கும்குழப்பமே. எதிர்ப்பாற்றல் இருப்பவர்களுக்கு அவரது உடலே மருந்து தயாரித்து விரைவில் குணமளித்துவிடுகிறது. சிலருக்கு கூட்டு மருந்துகள் தேவைப்படுகின்றன. சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை வரை செல்லவேண்டியுள்ளது. தமிழகத்திற்கு பிளாஸ்மா சிகிச்சைக்கு நடுவண் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் ஒருவர் அதற்காக பிளாஸ்மா தானம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வுகளை வைத்து கொரோனா வேகமாக பரவி வருகிறது கடந்த கிழமை வேகம் குறைவாக இருந்தது என்று கொரோனாவின் வேகத்தைக் கணிக்க முடியாது. வேகமாக சோதனை செய்தால் வேகமாக முடிவுகள் கிடைத்தால் நிறைய பாதிப்பாளர்கள் கிடைப்பார்கள். அதாவது கொரோனா பாதிப்பின் மிகச்சில நாட்களில் கண்டறியப்பட்ட முடிவு. அதாவது கொரோன பரவத்தொடங்கிய முதல் நாளில், இரண்டாவது நாளில் என்பது போல. (உண்மையில் சோதனைக் கருவிகளையும், சோதனைகளையும், உரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் குறைவாக வைத்துக் கொண்டு கொரோனா பாதிப்பாளர்களைக் கூட்டம் சேர்க்கிறோம். குறுகலான வழியை வைத்துக் கொண்டு மிகப் பெரிய அரங்கிற்குள் ஆட்களை அனுப்பினால் அல்லது மிகத்தாமதமாக அரங்கிற்குள் அனுப்பத் தொடங்கினால் அந்த அரங்கிற்கு வெளியே கூட்டம்- அடித்துக் கொள்கிற அளவிற்கு சேரும் என்பது நடைமுறையில் நாம் கண்டுவருகிற உண்மை.) ஒரு கிழமை கழித்து சோதனைகளை எடுத்தாலும், அதாவது கொரோனா பரவத்தொடங்கிய எட்டாவது நாளில், ஒன்பதாவது நாளில் என்பது போல. அப்போது அதே அளவு பாதிப்பாளர்களும் இருக்கலாம் அதிகமாகவும் பாதிப்பாளர்களும் இருக்கலாம். அதே அளவு பாதிப்பாளர்கள் இருந்தால்- எட்டாவது, ஒன்பதாவது நாள் வரையிலுமே அதிக பரவல் இல்லாமல், நோய் முற்றிய பாதிப்பாளர்களை நாம் கண்டறிகிறோம் என்று பொருள். அதிக பாதிப்பாளர்கள் இருந்தால் பரவலும் அதிகமாக இருக்கிறது தொடக்க நிலை நோயாளிகளும் முற்றிய நிலை நோயாளிகளும் பட்டியலில் வருகிறார்கள் என்று பொருள். கொரோனாவை உடனடியாக கண்டுபிடிப்பதற்கான முன்னேற்றத்தை இன்னும் நாம் கொணரவில்லை. கொரோனா வந்தவர்கள் அறியாமலே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நடப்பு நிலையில் எத்தனை பேருக்கு கொரோனா- தமிழகத்தில், அல்லது ஒரு மாவட்டத்தில், அல்லது ஒரு ஊரில் அல்லது ஒருபகுதியில் இருக்கும் என்று கணிக்க முடியாது. முதலாவதாக- எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிவது மட்டுமே கொரோனா ஒழிப்பிற்கான முழுமையான தீர்வாக இருக்க முடியும். அதுவரை- சோதனைக் கருவிகளையும், சோதனைகளையும், உரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் எல்லையில்லாமல் உயர்த்தியாக வேண்டும். அப்போதுதாம் கொரோனா எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற உண்மையான பட்டியல் நமக்குக் கிடைக்கும். ஆகா கொரோனா எத்தனை பேருக்கு இருக்கிறது என்று அறியத் தேவையேயில்லாமல் கொரோனாவை ஒழிக்க வேண்டுமானால் தேவை தடுப்பு மருந்து. தடுப்பு மருந்து கிடைக்காத வரை குணமளிப்பு மட்டுமே சாத்தியம். குணமளித்து கொரோனாவை ஒழிப்பதற்கு யார் யாருக்கு கொரோனா இருக்கிறது என்கிற புள்ளிவிவரம் கட்டாயம் தேவை. முழுமையான உடனடி புள்ளி விவரத்திற்கு, சோதனைக் கருவிகளையும், சோதனைகளையும், உரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் எல்லையில்லாமல் உயர்த்தியாக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நடுவண் அரசு தாராளமாக பணத்தை வாரியிறைக்க வேண்டும். வங்கிக் கணக்கில் பதினைந்து இலட்சம் போடுகிறோம் என்று வாக்கு வாங்கிய அதே பாணியை இந்தப் பேரிடரிலும்- மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கு, கைத்தட்டுதல், விளக்கணைத்து ஏற்றுதல், காணொலிக் கலந்துரையாடல், எட்டு மணிக்கு தொலைகட்சியில் பேசுதல் எல்லாம் வேலைக்கு உதவாது. நாம் ஒளிதல் அல்லது தப்பித்தில் நடவடிக்கையாக ஊரடங்கை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஊரடங்கி இருந்தாலும் கட்டாயத் தேவையை முன்னெடுப்பவன், கொரோனா இருப்பவன், பொருட்களில், காற்றில், சந்தையில் பரப்பிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறான். தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரி தொடர்பாக இன்றைய நிலவரத்தை மாநில நலங்குத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
அந்தத் தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



