Show all

தமிழக அரசுக்கு உத்தரவு! ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு நகலை பதிகை செய்ய

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று பதிகை செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுக் காற்றால் இப்பகுதியில் வசிப்பவர்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் கடந்த இருபது ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அறங்கூற்றுமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இப்போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எம்ஜிஆர் திடலில் வரும் ஞாயிறு அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மனு அளித்தோம். ஆனால், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து தூத்துக்குடி காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் பொதுமக்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். இதனால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்து தூத்துக்குடி காவல் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் வரும் ஞாயிறன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச அறங்கூற்றுமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவருவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை நாளை பதிகை செய்யுமாறு தமிழக அரசுக்கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,746. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.