Show all

திருச்செந்தூர் முருகன் கோயில், மயில்சிலை திருட்டு முயற்சி, தடுத்து நிறுத்தம்! இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்கு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில் சிலையை கமுக்கமாக அகற்றியதாக முன்னாள் இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்பணர்வால் திருட்டு தடுக்கப் பட்டது. 

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூலவர் சிலைக்கு முன்பாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில்சிலை இருந்தது. இந்த சிலை பலகோடி மதிப்பு கொண்டது. 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயில் சிலை சேதமாகி இருப்பதாகக் கூறி அதை அங்கிருந்து அகற்றினர். இது பொதுமக்களுக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. 
பொதுமக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட சிலை 13 நாள் கழித்து அதே இடத்தில் வைக்கப்பட்டது. சிலை சேதமாகியிருந்தால் அதை மாற்ற அப்போதைய இணை ஆணையராக இருந்த பரஞ்ஜோதி, தமிழக அறநிலையத்துறை ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை என தெரியவந்தது.
சிலையை அகற்றியதில் உள்நோக்கம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த அறங்கூற்றுவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் பொன்மாணிக்கவேல் மற்றும் நீலகிரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தென்னரசன் ஆகியோர் கொண்ட குழு திருச்செந்தூர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிலை அகற்றப்பட்டு மீண்டும் வைக்கப்பட்டதையும், இதற்கு மேலிடத்தில் அனுமதி பெறவில்லை என்பதையும் உறுதி செய்தனர். இதுகுறித்து திருக்கோயில் காவல்துறையில் அவர்கள் புகார் செய்தனர். அதனடிப்படையில் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, உள்துறை அலுவலர் பத்மநாபன் உள்பட 6 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,141.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.