Show all

காலம் ஒரு சிறந்த காரணி! புதிய கட்சி, புதிய கொள்கை, இளையவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமே

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜியார் அவர்கள் தனது அறுபதாவது அகவையில் கலைத்துறைக்கு விடை கொடுத்து விட்டு தமிழக முதல்வர் ஆனார். பத்தாண்டுகள் தமிழக முதல்வராக இருந்து சிறப்பான ஆட்சி புரிந்த அவர் தனது பதவி காலத்திலேயே இயற்கை எய்தினார்.

தமிழகத்தில் கலைத்துறைக்கு வருவோரும் சரி அரசியலுக்கு ஆசைப் படுவோரும் சரி எம்ஜியாரை தனக்கான முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முயல்கிறார்கள்.

எம்ஜியார் கலைத்துறைக்கு தனது ஒற்றைப் படை அகவையிலேயே வந்து விட்டார். எம்ஜியார் அவர்கள் கலைத்துறையில் தான் பின்பற்றிய பாணியையே வாழ்க்கையாகவும் கொண்டிருந்தார். அது அவர் எந்தத் துறையிலும் ஒளிர முடியும் என்பதற்கான தகுதியாக இருந்தது.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்பார் வள்ளுவப் பெருந்தகை. ஆனால் தற்போது தமிழக ஆட்சிக்காக அணி வகுத்திருப்பவர்களின் அகவையை நோக்கினால் இவர்களெல்லாம் காலம் தாழ்த்திய முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வனப்புகழ் வீரப்பன் அவர்கள் அவரது 52வது அகவையில் படுகொலை செய்யப் பட்டார். காட்டில் இருந்து கொண்டு தொடர்ந்து போராடுவதற்கு அந்த அகவை போதாமல் போய் விட்டது. 

உலகத்தில் தமிழர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபாகரன் தனது 54வது அகவையில் படுகொலை செய்யப் பட்டார். அந்த வகையான போராட்டத்திற்கு அந்த அகவையே போதவில்லையோ!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு  அகவை 68 அவர் கலைத்துறையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த போதும், கலைத் துறையையும் விடாமல் அரசியலுக்கு வருகிறேன் என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். விஜய்காந்த்துக்கு அகவை 66 அவருக்கு எவ்வளவோ வெற்றி வாய்ப்புகள் இருந்தும் அவர் உடல்நிலை அதற்கெல்லாம் இடம் கொடுக்க வில்லை. அவரது மனைவியோ, மகனோ, மச்சானோ நேரடியாக அரசியலுக்கு வரும் துணிவில்லாமல் விஜய்காந்தால் முடியும் என்று அவரை கேடயமாக நிறுத்த முயல்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு அகவை 66 ஒரு முறை துணை முதல்வராக இருந்து விட்டார். இனி தமிழகத்தை நான்தான் காக்கப் போகிறேன் என்று மார்தட்டி வருகிறார்.

64 அகவையுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 68 அகவையுள்ள பன்னீர் செல்வத்தை துணைக்கு வைத்துக் கொண்டு 55 அகவையுள்ள தினகரனை வெளியேற்ற 68 அகவையுள்ள நரேந்திர மோடியின் தேளை தொற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

64 அகவையுள்ள கமல்காசன் நானுந்தான் என்று அரசியல் களமாடிக் கொண்டிருக்கிறார். எம்ஜியார் அவர்களைப் போல ஒற்றைப் படை அகவையில் கலைத்துறைக்கு இவர் வந்தவர்தான் என்றாலும், இவரின் பாணிகள் கலைத்துறையிலும் சரி வாழ்க்கையிலும் சரி சாதனை முயற்சியே அன்றி சமூக அக்கறை சார்ந்ததாக இருந்திருக்க வில்லை.

வைகோவுக்கு அகவை 74. அவர் தனித்து அரசியலில் ஈடுபட முடியாது என்று முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் அவர் மாமனிதர். இதுவரையில் அவர் பணி போற்றுதலுக்குரியதே.

கனிமொழிக்கு அகவை 51. தினகரனுக்கு அகவை 55 நாம்தமிழர்கட்சி சீமானுக்கு அகவை 52 அன்புமணி ராமதாசுக்கு அகவை 50. இவர்கள் எதிர்காலம் சிறப்படையவும், இவர்களால் தமிழகம் பெருமைகொள்ளவும் காலம் நிறைய இருக்கிறது. விஜய் பிரபாகரனையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் விஜய் அகவை 44. இவர் அரசியலுக்கு வந்தால், புதிய கட்சி, புதிய கொள்கை என்று மிக சிறப்பாக இருக்கும் என்றே நம்பலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,078. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.