Show all

இது விஜய் இரசிகையின் குரல்! அதிமுகவிற்கு வாக்கு இல்லை என்று பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஒலிக்கப் பட்டுவருகிறது

காங்கிரஸ் கட்சியின் இறுதி காலங்களில் இப்படிதான்- ஆளும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்க மக்களிடம் வரும் போது, மக்களே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதுபோலவே: நேற்று தம்பி துரைக்கு வாக்கு சேகரிப்பில் எதிர்ப்பு ; இன்றைக்கு புது விதமாக திருப்பூரில் அதிமுக பாஜகவினருக்கு சுவரொட்டி ஒட்டி எதிர்ப்பு. தற்போது விஜய் இரசிகை எதிர்ப்பு

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் பட விவகாரத்தை வைத்து அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விஜய் இரசிகை ஒருவர் செய்த சம்பவம் தீயாகி வருகிறது.

அதிமுகவினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என விஜய் இரசிகை ஒருவர் பதாகை பிடித்து நிற்கும் புகைப்படம் தீயாகி வருகிறது இணையத்தில். 

அவர் பெயர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி. அவர் தெரிவிக்கிறார்.

'சர்கார் பட வெளியீட்டின் போது அதை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் வைத்திருந்த தட்டி சுவரொட்டிகளைக் கிழித்தார்கள். அவர்கள் இப்படி நடந்துகொண்டதற்கு ஏதாவது பயனுள்ள காரணம் இருக்கிறதா? திரைப்படத்தில் ஒரு கருத்து சொல்லப்பட்டால் அதைச் திரைப்படமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி அதை எடுத்துக்கொள்ளவில்லை. 

சாதாரண ரசிகன் முதல் மன்ற நிர்வாகி வரை அனைவரும் தங்களது சொந்தக் காசை போட்டு தட்டி, பதாகை வைத்தார்கள். எங்களுடைய மகிழ்ச்சிக்காக அதைச் செய்தோம். விஜய் இரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் அப்படிதான் செய்து வருகிறார்கள். 

அப்படி இருக்கையில் திரைப்படத்தில் சொன்ன கருத்துக்காக அதிமுகவினர் பிரச்னை செய்து நாங்கள் வைத்த தட்;டி பதாகைகளைக் கிழித்தார்கள். சாதாரண பிரச்னைக்காக எங்களைக் கண்ணீர்விட வைத்தார்கள். 

அந்தச் சம்பவம் ஒவ்வொரு விஜய் இரசிகரின் மனதிலும் மறையாமல் இருக்கிறது. இந்தக் காரணத்துக்காகதான் எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என சுவரொட்டி அடித்து வீட்டின் வாசலில் ஒட்டினேன். வலைதளங்களில் பதிவிட்டேன். வலைதளங்களிலும் எங்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அண்ணனோ, ரசிகர் மன்ற நிர்வாகிகளோ யாரும் எங்களை இப்படிச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. நான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது எனக்கான உரிமை. எங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டுப்போடுவோம். ஆனால், அதிமுகவினருக்கு ஓட்டுப் போட மாட்டோம். இது தேர்தல் சமயம் என்பதால் எங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிமுக மீது விஜய் மக்கள் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். அதை இந்தத் தேர்தலில் காண்பிப்பார்கள். என் உறவினர் கூட அதிமுகவில்தான் இருக்கிறார். இருந்தும் இதுவரை எங்கள் வீட்டுக்கு யாரும் ஓட்டு கேட்டு வரவில்லை' எனக் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.