திருமுருகன் காந்தி மீது எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. எட்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன்காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டன. அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன்காந்தி பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார். 24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருமுருகன் காந்தி பெரியாரிய சமூக சீர்த்திருத்தவாதி ஆவார். இவர் தமிழ் இனத்தின் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பான மே 17 இயக்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார். திருமுருகன் காந்தி தமிழீழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக் குறித்த மே 17 இயக்கத்தின் கருத்துக்கள், செயற்பாடுகள் குறித்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக் கடற்கரையில் நடந்த ஒரு பேரணியில் விளக்கிப் பேசினார். இவர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து அது சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருந்துள்ளார். தமிழீழத்தில் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற நினைவேந்தல் நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். இதனால் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து ஐ.நா அவையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. முகிலன் காணாமல் போனதற்காக நடத்திய போராட்டம், காவிரி விவகாரம் தொடர்பான போராட்டம், ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான போராட்டம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி முன்னெடுத்து வந்தார். திருமுருகன்காந்தி இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , தொடர்ந்து உயர்அறங்கூற்றுமன்றம், உச்சஅறங்கூற்றுமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாகவும் திருமுருகன்காந்தி மீது வழக்குகள் தொடரப்பட்டன. அவர் மீது திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன்காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன்காந்தி பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார். அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ், ‘திருமுருகன் காந்தியின் பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அவர் மீது காவல் துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருக்கிறது. அவர் பின்னால் இருந்து யாரேனும் இயக்குகிறார்களா என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்’ என தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,208.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



