Show all

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து உண்டான சூழல் காலச் சுழற்சியென மீண்டும்

     சசிகலாவை முதல்வராக்குவது என்பது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்ட விசயம். சசிகலாவை முதல்வராக்குவதற்கான முயற்சியில் எதிர் கட்சிகளும், ஊடகங்களும், எவ்வாறு பொதுமக்களை வளைத்து வழி நடத்த முயற்சிக்கும் என்பதை ஓரளவு ஊகித்திருந்த நிலையில்,

செயலலிதாவால் முன்மொழியப் பட்டவர் என்கிற பெருமைக்குரியவர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை  தமிழக முதல்வராக அறிவிக்கும் போது மக்கள், எதிர் கட்சிகள், ஊடகங்கள் என்று எந்த மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பாது என்று நம்பி அதிமுகவினர் காய் நகர்த்தினர். அவர்கள் கணிப்புக்கு நூறு மதிப்பெண் பெற்றார்கள்.

     ஆனால் மக்கள், எதிர் கட்சிகள், ஊடகங்கள் இயல்பாக இருந்த நிலையில் அதிமுகவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கட்சியின் சட்டமன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

     இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எந்நேரமும் சசிகலா முதல்வராகப் பதவியேற்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி-

எதிர் கட்சிகளும், ஊடகங்களும்;, எவ்வாறு பொதுமக்களை வளைத்து வழி நடத்த முயற்சிக்கும்  என்று காத்திருந்த நிலையில்-

     நேற்று டெல்லி விரைந்து ஜனாதிபதியைச் சந்தித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வராமல் அங்கிருந்து மும்பைக்கு பயணமானார்.

     இந்த நிலையில் எதிர்பாராவிதமாக இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சுமார் 9 மணிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நாற்பது நிமிடங்கள் கண் மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார். அப்போது அவரது முகம் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது. மேலும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தபடி இருந்தது. நாற்பது நிமிடங்கள் கழித்து கண்களைத் துடைத்துக் கொண்டு ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்துவிட்டு பத்திரிகையாளரைச் சந்தித்துப் பேசினார். 

     அப்போது பேசிய அவர், தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்ததாகவும். ஜெயலலிதாவின் இறப்பை அடுத்து நிகழ்ந்தவற்றைப் பற்றியும் கூறினார். தனக்கு முதல்வராகும் எண்ணமே இல்லாத நிலையில் தான் முதல்வராக்கப் பணிக்கப்பட்டதாகவும், பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை நியமிக்க வேண்டும் என்று திவாகரன் கூறியதாகவும், அதைத் தொடர்ந்து எழுந்த வர்தா சிக்கல், சல்லிக்கட்டுப் போராட்டம் என பல பிரச்னைகளிலும் தான் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்ட போதும் அது அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை என்றும். திடீரென அவர்களே முதல்வராக வேண்டும் என்று எண்ணி தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும். ஜெ.வின் நினைவிடத்திற்கு சென்று வந்துவிட்டு ராஜினாமா கடிதம் தருவதாகக் கூறியபோது கூட கையைப் பிடித்துக் கொண்டு கட்டாயப் படுத்தி அவர்கள் ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறி சில மணி நேரத்தில் தமிழக அரசியலில் மிகப் பரபரப்பான சூழல் ஒன்றை உருவாக்கினார் பன்னீர் செல்வம்.

     தொண்டர்கள் விரும்பும் ஒருவர்தான் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மக்கள் விரும்பும் ஒருவர்தான் முதல்வராகவும் இருக்கவேண்டும் இதற்காக தனியொருவனாகப் போராடவும் தான் தயார் என்றும் பகிரங்க அறிவிப்பு கொடுத்துவிட்டு அவ்விடத்திலிருந்து சிரித்தபடி நகர்ந்தார்.

     கட்சியைக் காக்கத் தனிமனிதனாகக் கூடக் கடைசிவரை போராடுவேன் என்றிருக்கிறார் பன்னீர்செல்வம். அவரின் இந்த நிலைப்பாட்டிற்காக தீபா பக்கம் சென்ற பலர் தற்போது இவர் பின்னணிக்கு வரலாம். இவர் போலவே இதுநாள் வரை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சிக்கித் தவித்தவர்களும் இவருடன் இணையலாம். ஆனால் தனிமனிதனாக நிற்பேன் என்று சொன்ன குரலின் பின்னணியில் ஏதேனும் ஒரு ஆதரவு இல்லாமல் நிச்சயம் அப்படியொரு நிலைப்பாட்டை அவர் எட்டியிருக்கமாட்டார்.      தம்பிதுரையை சந்திக்கத் தவிர்த்த மோடி ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தது வேண்டுமானால் முதல்வர் என்று மரியாதைக்காக இருக்கலாம். ஆனால் ஜெ.யின் உடல் ராஜாஜி கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த நிமிடங்களில் அவரது கால்களைத் தவிர பன்னீர் செல்வம் கரமெடுத்துக் கும்பிட்டது மோடியிடம் மட்டுமே. இதனை ஊர்ஜிதப்படுத்தவது போலவே அதிமுகவின் மதுரை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பன்னீருக்கு மத்தியில் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆளுநர் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அவரும் தமிழகம் வராமல் மும்பையைதான் தேர்ந்தெடுத்தார்.

     முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து உண்டான சூழல் காலச் சுழற்சியென மீண்டும் உருவாகி இருக்கிறது. ஜெ. தனியொரு ஆட்சியாளராக உருவெடுத்தது அதன்பிறகுதான். இந்த முறை சுழற்சி சசிகலாவையே நிறுத்தும். ஏனென்றால் சசிகலாவை முன்னிறுத்துகிறவர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள். ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்துகிறவர்கள் அதிமுக உடைந்தால் ஆதாயம் அடைகிற அத்தனைச் சக்திகளும்.

     மக்களிடம் மிகப் பெரும்பான்மை சக்தி பெற்றிருக்கிற அதிமுக உடைந்தால் வைப்புதொகை இழந்த கட்சிகள், வெறும் அஞ்சல் கொத்து மட்டும் வைத்திருக்கிற கட்சிகளுக்கெல்லாம் மரியாதை கூடும் சில பல சட்டமன்றத் தொகுதிகள் கிடைக்கும்.

     அதனால் தாம் வலிந்து வலிந்து கொம்பு சீவிக்கொண்டிருக்கின்றார்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதாயம் பெறப் போகின்றவர்கள்; சில பல ஊடகங்களுந்தாம்!

     ஏது நடந்தாலும் மக்களுக்கான ஆதாயம் எப்போதும் போலத்தான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.