அதிமுகவின்
மூத்த தலைவரான எம்.தம்பிதுரை இன்று மாலை பிரதமர் நரேந்தர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில்
சந்தித்தார். இதில், தமிழக நிலவரம் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கம் அளித்ததாகக்
கூறப்படுகிறது. அதிமுகவின்
பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அக்கட்சியில் பல்வேறு திருப்பங்கள்
ஏற்பட்டு வருகின்றன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் புதிய முதல் அமைச்சராக பரிந்துரைக்கப்பட்ட
சசிகலாவின் பதவி ஏற்பு நடைபெறுவது தள்ளிப் போய் உள்ளது. இதற்காக, தமிழக ஆளுநர் வித்யாசாகர்
ராவ் மீது குடியரசு தலைவரை நேரில் சந்தித்து புகார் அளிக்க அதிமுக எம்பிக்கள் முயன்று
வருகின்றனர். இதற்காக கேட்கப்பட்ட நேரம் இன்னும் கிடைக்காத நிலையில், மக்களவைத் துணை
சபாநாயகரும் அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை திடீர் என பிரதமர் மோடியைச் சந்தித்து
பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் முதல்கட்ட வரவு-செலவுக் கூட்டத்தொடரின் கடைசி நாளில்
கலந்து கொள்ள பிரதமர் வந்திருந்தார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமருடன் மாலையில்
சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது
குறித்து அதிமுக பாராளுமன்ற வட்டாரம் கூறுகையில், ‘தற்போது தமிழகத்தில் நிலவும் சூழலில்
இந்த சந்திப்பு மிகவும் தலையாயது. இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட முழுவிவரம் எங்களுக்கு
கூறப்படவில்லை. ஆனால், பிரதமருடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இதில், சசிகலா முதல் அமைச்சராக்கப்படுவதில் உள்ள எங்கள் தரப்பு நியாயங்கள் அவரிடம்
எடுத்துக் கூறப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் பற்றிய சில பின்னணி விவரங்களும் பிரதமரிடம்
விளக்கப்பட்டுள்ளது. இனி, நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.’ எனத் தெரிவித்தனர். பிரதமரின்
சந்திப்பிற்குப் பின் அதிமுக பாராளுமன்றஉறுப்பினர்களைத் தம்பிதுரை துக்ளக் சாலையில்
உள்ள தனது அரசு குடியிருப்பிற்கு வரும்படி அழைத்திருந்தார். அங்கு ஒரு அவசர ஆலோசனைக்
கூட்டமும் நடைபெற்றுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் முடிந்த நாளில் உடனடியாக தமிழகம்
திரும்பும் அதிமுக பாராளுமன்றஉறுப்பினர்கள் இன்னும் டெல்லியிலேயே தங்கி உள்ளனர். பிரதமருடன்
தம்பிதுரை சந்திப்பிற்குப் பின் குடியரசு தலைவரிடம் புகார் அளிப்பதா? வேண்டாமா? என்பதில்
மாற்றுக்கருத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், தமிழக ஆளுநர் வித்யாசாகர்
ராவ் எடுக்கும் முடிவை பொறுத்து இது அமையும் எனக் கருதப்படுகிறது. இதுவரை, அதிமுக பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு
டெல்லியிலேயே தங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



